காந்தளில் கொன்றையும் இந்திர கோபமும் 4178. | நல் நெடுங் காந்தள் போதில், நறை விரி கடுக்கை மென் பூ, துன்னிய கோபத்தோடும் தோன்றிய தோற்றம் - தும்பி இன் இசை முரல்வ நோக்கி, இரு நில மகள் கை ஏந்தி, பொன்னொடும்காசை நீட்டிக் கொடுப்பதே போன்றது அன்றே! |
நல்நெடுங் காந்தள் போதில் - அழகிய நீண்ட காந்தள் மலரில்; நறைவிரி கடுக்கை மென்பூ - வாசனை வீசுகின்ற கொன்றையின் மெல்லிய மலர்கள்; துன்னிய கோபத்தோடும் - (அவற்றிடம்) வந்து பொருந்திய இந்திர கோபத்துடன்; தோன்றிய தோற்றம் - விளங்குகின்ற காட்சி; தும்பி இன் இசை முரல்வ நோக்கி - வண்டுகள் இனிய இசை பாடுவதைப் பார்த்து; இரு நில மகள் - பெரிய பூமியாகிய பெண்; கை ஏந்தி - தன் கைகளை உயர எடுத்து; பொன்னொடும் காசை நீட்டி - பொன்னொடு பவளத்தையும் நீட்டி; கொடுப்பதே போன்றது - கொடுப்பதை ஒத்தது. காந்தளுக்குக் கையும், கொன்றை மலர்க்குப் பொன்னும், இந்திர கோபத்திற்குப் பவளமும் நிறத்தால் உவமையாகும். காந்தளுக்குக் கை, வடிவால் ஒப்பாகும். காந்தள் மலரால் ஏந்துதற்குரிய மென்மையுடைமை தோன்ற 'கடுக்கை மென்பூ' எனப்பட்டது. கொன்றை மரம் உயர்ந்திருத்தலின் அதன் மலர் காந்தள் மலரில் வீழ்தல் இயல்பாயிற்று. காந்தள் மலரில் பொன்னிறக் கொன்றையும் சிவந்த கோபமும் இருக்கும் தோற்றம். வண்டின் இசைகேட்டு மகிழ்ந்த நிலமகள் பொன்னையும், பவளத்தையும் கை நீட்டிக் கொடுத்ததை ஒக்கும் என்றது தற்குறிப்பேற்ற அணி. கொன்றைப்பூவின் நிறம் பொன் போன்றது என்பதை 'முறியிணர்க் கொன்றை நன்பொன் கால' (முல்லைப்பாட்டு-94) 'சுடும்பொன் அன்னகொன்றை சூடி' (ஐங்குறுநூறு-புற-2); 'கொன்றை ஒள்வீ தாஅய்ச் செல்வர் பொன்பேய் பேழை மூய் திறந்தன்ன' (குறுந்-233) என்ற அடிகள் உணர்த்தும். வண்டுகளின் ரீங்காரம் இசையாக அமைவதைக் 'குழல் வண்டு தமிழ்ப்பாட்டிசைக்கும் தாமரையே' (3736) 'யாழிசை இன வண்டார்ப்ப' (முல்லைப்பாட்டு-8), ''குழல் இசை தும்பி கொளுத்திக் காட்ட, மழலை வண்டு இனம் நல்யாழ் செய்ய'' (மணி-4-3-4), 'தென்னா தெனா என்று வண்டு முரல' (திருவாய்-3-9-1) என்ற அடிகளில் காணலாம். காசு - நவமணிகளின் பொதுப்பெயர். ஈண்டுப் பவளத்தைக் குறித்தது. 'பவழம் சிதறியவை போலக் கோபம் தவழும் தகைய புறவு' (கார்.நாற்-5), 'மணிமிடை பவளம்போல அணிமிகக் காயாம் செம்மல் தாஅய்ப் பலவுடன், ஈயல் மூதாய் ஈர்ப்புறம் வரிப்ப' (அகநா-304) எனப் பவளத்தையே கோபத்திற்கு உவமையாக்கியமை காண்க. அன்றே - ஈற்றசை. 31 |