மான்கள் 4182. | பூ இயல் புறவம் எங்கும் பொறி வரி வண்டு போர்ப்ப, தீவிய களிய ஆகிச் செருக்கின; காமச் செவ்வி, ஓவிய மரன்கள்தோறும் உரைத்து, அற உரிஞ்சி, ஒண் கேழ் நாவிய செவ்வி நாற, கலையொடும் புலந்த நவ்வி. |
பூ இயல் புறவம் - மலர்கள் பொருந்திய காடுகள்; எங்கும் - எவ்விடத்திலும்; பொறிவரி வண்டு போர்ப்ப - புள்ளிகள் பொருந்திய இசை பாடும் வண்டுகள் மொய்த்து நிறைய; தீவிய களிய ஆகி - (காண்பவர்க்கு) இனிய மகிழ்ச்சியைத் தருவனவாகி; செருக்கின - தழைத்து விளங்கின; காமச் செவ்வி - (ஆண்மான்கள்) தாம் கொண்ட காதல் முதிர்வால்; ஓவிய மரன்கள் தோறும் - சித்திரத்தில் எழுதியது போன்ற மரங்களிலெல்லாம்; உரைத்து அற உரிஞ்சி - உராய்ந்து நன்றாக உடல் தேய்த்து வந்து; ஒண்கேழ் நாவிய செவ்வி நாற - (தம்முடம்பு முழுவதும்) ஒளிமிக்க நிறமும் கத்தூரி நறு மணமும் கமழ; கலையொடும் நவ்வி - (வந்த) அந்த ஆண்மான்களோடு பெண்மான்கள்; புலந்த - (அவற்றை வேற்றினமாகிய கத்தூரி மானோடு கூடிக்கலந்து வந்தவனவாகக் கொண்டு) பிணங்கின. நிலமெங்கும் மலர்கள் நிறைந்திருத்தலால் 'பூ இயல் புறவம்' என்றார். வனத்தை மொய்க்குமாறு அடர்ந்து மொய்க்கின்றமையால் 'போர்த்து' என்றார். வரி - வரிப்பாட்டு; தீவிய - தீம் என்றதன் அடியாகப் பிறந்த பெயரெச்சம். நாவி - கத்தூரி எனும் மணப்பொருள். கத்தூரி வகை மானின் நாபியில் உள்ள கொழுப்பாகும். அதனால் அம்மான் 'மிருகாநாபி' எனவும் வழங்கப்படும். மரங்களில் உராய்ந்து மணம் பெற்று வந்த ஆண்மானைக் கத்தூரிமான்களோடு காதல் கொண்டு சேர்ந்து அவற்றின் மணம் பெற்று வந்தனவாகப் பெண்மான்கள் மயங்கக் கருதி ஊடியதாகக் கூறியதால் மயக்க அணி. 35 |