குவளை குவிய, முல்லை அரும்புதல் கலித்துறை 4183. | தேரில் நல் நெடுந் திசை செலச் செருக்கு அழிந்து ஒடுங்கும் கூர் அயில் தரும் கண் எனக் குவிந்தன குவளை; மாரன் அன்னவர் வரவு கண்டு உவக்கின்ற மகளிர் மூரல் மென் குறு முறுவல் ஒத்து அரும்பின, முல்லை. |
தேரில் நல்நெடுந்திசை செல - (தன்னைப் பிரிந்த தலைவன்) தேரில் ஏறிப் (பொருளீட்ட) நல்லதாகிய நெடுந்தூரம் செல்ல; செருக்கு அழிந்து ஒடுங்கும் - (பிரிவுத் துன்பத்தால்) மகிழ்ச்சி நீங்கி ஒடுங்கும் (தலைவியின்); கூர் அயில் தரும் கண் என - கூர்மையான வேல் போன்ற கண்களைப் போல; குவளை குவிந்தன - கருங்குவளை மலர்கள் இதழ் குவிந்தன. மாரன் அன்னவர் வரவு கண்டு - மன்மதனை ஒத்த தம் தலைவர் மீண்டு வருதலைப் பார்த்து; உவக்கின்ற மகளிர் - மகிழ்கின்ற மகளிரின்; மென் குறு முறுவல் மூரல் ஒத்து - மெல்லிய புன்சிரிப்பில் தோன்றும் பற்களைப்போல; முல்லை அரும்பின - முல்லைக் கொடிகள் அரும்பின. பிரிந்த மகளிர் விழிகள் போலக் கருங்குவளை குவிய, தலைவர் வரவு கண்டு மகிழ்ந்த மகளிர் புன்முறுவலொத்து முல்லைகள் அரும்பின. உவமை அணி. நிறமும் வடிவும் பற்றிக் கண்களுக்குக் கருங்குவளையும், பற்களுக்கு முல்லை அரும்பும் உவமை ஆயின. துன்பத்தால் கண்கள் மலர்ச்சியின்றி இடுங்குதல் இயல்பு. ஆடவர்க்குத் துன்பம் விளைத்தலால் 'கூர் அயில் தரும் கண்' என்றார். தரும் - உவம உருபு. கார்காலத்தில் குவளை குவிதலும் முல்லை அரும்பலும் இயல்பாகும். 'கோடல்கள் பெருமை கூர, குவலயம் சிறுமை கூர' (4173); என முன்னர் வந்தமை காண்க. பற்கள் சிறிது தோன்ற முறுவலிக்கும். மகளிர் இயல்பு தோன்ற 'மென் குறு முறுவல்' என்றார். 'கண்கள் போன்றன குவளைகள், பற்கள் போன்றன முல்லை அரும்புகள்' என்று வழக்கிலுள்ள உவமைகளை மாற்றிக் கூறியதால் எதிர்நிலை அணியாகும். 36 |