மான்களின் மகிழ்ச்சி 4186. | ''நோக்கினால் நமை நோக்கு அழி கண்ட நுண் மருங்குல் தாக்கு அணங்கு அருஞ் சீதைக்கு, தாங்க அருந் துன்பம் ஆக்கினான் நமது உருவின்'' என்று, அரும் பெறல் உவகை வாக்கினால் உரையாம்' என களித்தன - மான்கள். |
நோக்கினால் - ''(தனது) பார்வை அழகால்; நமை - நம்மை; நோக்கு அழிகண்ட - பார்வையின் அழகு கெடுமாறு செய்த; நுண்மருங் குல் - நுண்ணிய இடைய உடைய; தாக்கு அணங்கு - வருத்தும் தெய்வம் போன்றவளாகிய; அருஞ்சீதைக்கு - அரிய சீதைக்கு; தாங்க அருந் துன்பம் - பொறுத்தற்கரிய துன்பத்தை; நமது உருவின் ஆக்கினான் - (மாரீசன் என்பான்) நம்முடைய மான் வடிவம் கொண்டு செய்தான்; என்று - என்று எண்ணியதால்; அரும்பெறல் உவகை - பெறுதற்கரிய மகிழ்ச்சியை; வாக்கினால் உரையாம் - வாய் திறந்து சொல்லினால் சொல்லக்கடவோம் அல்லோம்; என - என்று (பேசாமல் களித்தாற் போல); மான்கள் களித்தன- மான்கள் குரல் காட்டாமல் களித்தன. கண்ணழகில் சீதைக்கு நிகராகாமல் தோற்றுப்போய்த் தங்களை அவள் வென்றமைக்குச் சினங்கொண்டு, எதையும் செய்யும் வல்லமை இல்லாதிருந்த மான்கள், மாரீசன் தங்கள் வடிவத்தைக் கொண்டு சீதைக்குப் பெருந்தீங்கு செய்ததால் மகிழ்ச்சி கொண்டு, அம்மகிழ்ச்சியை வாய்விட்டு உரைத்தால் இராமன் தம்மையும் மாரீசனைக் கொன்றதுபோல, அம்பெய்திக் கொன்றுவிடுவான் என்ற அச்சத்தால் பேசாமல், உள்ளுக்குள் களித்து நின்றன என்பது கருத்து. கார்காலத்தில் களிப்படைந்தும் ஆரவாரம் செய்யாமல் இருந்த மான்களின் நிலையை இவ்வாறு கூறியது தற்குறிப்பேற்ற அணியாகும். மதங்க முனிவர் போன்றவர்களின் தவத்திற்கு இடையூறாகுமோ என அஞ்சி மான்கள் ஆரவாரம் செய்யாமல் ஊமை போல் இருத்தல் பற்றியே அம்மலைத்தொடர் 'உருசிய மூகம்' என்னும் பெயர் கொண்டது என்பது இங்குக் கருதத்தக்கது. உருசியம் - மான்; மூகம் - ஊமை. சீதையின் கண்களுக்குத் தோற்ற மான்கள் ஒன்றும் செய்ய முடியாமல் வருந்திப் பின்னர் மாரீசனது மான்வடிவத்தால் தம்பழி தீர்த்துக் கொண்டவனாகக் கருதி மகிழ்ந்தன என்க. மாரீசன் மான் வடிவம் கொண்டது கம்பரின் இந்தக் கற்பனைக்கு காரணமாயிற்று. மகளிர் நோக்கிற்கு மானின் மருண்ட பார்வை உவமையாகும். 'நின்னே போல மா மருண்டு நோக்க' (ஐங்குறு - 492), என்பது ஒப்பு நோக்கத்தக்கது. நோக்கு அழிகண்ட - பார்வையால் வெல்லுதலைக் கண்ட; தாக்கணங்கு - இதனை மோகினி என்றும கொல்லிப்பாவை என்றும் கூறுவர் ஒரு சாரார். மகிழ்ச்சி மிகுதியினால் வாய் திறந்து ஒன்றும் சொல்ல முடியாதிருத்தல் இயல்பு. ''மேக்கு நீங்கிய வெள்ள உவகையால், ஏக்கமுற்று, 'ஒன்று இயம்புவது யாது?' என நோக்கி நோக்கி அரிதென நொந்துளேன்'' (9977) எனச் சீதை கூறுவது காண்க. 39 |