குயில்கள் குரல் ஒடுங்கின 4193. | 'நீயிர், அன்னவள் குதலையிர்ஆதலின், நேடி, போய தையலைத் தருதிர்' என்று, இராகவன் புகல, தேயம் எங்கணும் திரிந்தன போந்து, இடைத் தேடிக் கூய ஆய், குரல் குறைந்தபோல் குறைந்தன - குயில்கள். |
நீயிர் - 'நீங்கள்; அன்னவள் குதலையிர் ஆதலின் - அந்தச் சீதை யின் மழலை போன்ற இனிமையான குரலை உடையவர்களாதலால்; போய தையலை - (சூழ்ச்சியால்) என்னைப் பிரிந்த சீதையை; நேடித் தருதிர் என்று- தேடித் தருவீர்கள்' என்று; இராகவன் புகல - இராமன் (குயில்களை நோக்கிக்) கூற; குயில்கள் - அக்குயில்கள்; தேயம் எங்கணும் - (அதற்கு இணங்கி) எல்லா இடங்களிலும்; திரிந்தன போந்து - திரிந்து வந்து; இடைத் தேடி - அந்தந்த இடங்களில் அவளைத் தேடி; கூய ஆய் - உரக்கக் கூவி அழைத்தனவாய்; குரல் குறைந்த போல - குரல் கம்மின போல; குறைந்தன- (கார்காலத்தில்) குரல் ஒடுங்கின. கார் காலத்தில் குயில் கூவாமை இயல்பு. கார்காலத்தில் குயில் கூவாமை 'ஆடின மயில்கள் பேசாது அடங்கின குயில்கள்' (4173) என முன் கூறியதாலும் 'கருங்குயில் கையற மாமயில் ஆல' (கார்.நாற்.16) என வருதலாலும் அறியலாம். குதலை - குழந்தைப் பருவத்திற்கே உரியதாயினும் மகளிர்க்கு எல்லாப் பருவத்திலும் பொருந்தியதாகக் கூறுதல் கவிஞர் இயல்பு. பறவையிடம் பேசுவதாகக் கூறுவது கவிமரபாகும். குயில்கள் குயில் மொழியாளைத் தேடின என்றதன் நயன் காண்க. 46 |