ஆம்பியும் பிடவமும்

4194. பொழிந்த மா நிலம் புல்
      தர, குமட்டிய புனிற்றா
எழுந்த ஆம்பிகள் இடறின,
      செறி தயிர் ஏய்ந்த;
மொழிந்த தேனுடை முகிழ்
      முலை ஆய்ச்சியர் முழவில்
பிழிந்த பால் வழி நுரையினைப்
      பொருவின - பிடவம்.

     பொழிந்த மாநிலம் - மழை பெரியதாகப் பெய்யப் பெற்ற பெரிய பூமி;
புல் தர -
பசும் புல்லைத் தர; குமட்டிய புனிற்றா - (அவற்றை) மிகுதியாக
மேய்ந்து தெவிட்டிய ஈன்றணிமையை உடைய பசுக்களால்; இடறின -
இடறப்பட்டனவாய்; எழுந்த ஆம்பிகள் - ஆங்காங்குப் பூத்து எழுந்த
காளான்கள்; செறி தயிர் ஏய்ந்த - (அவ்வாறு இடறப் பெற்ற காளான்கள்)
கட்டித் தயிரைப் போன்று விளங்கின.பிடவம் - பிடவம் என்னும் செடியின்
மலர்கள்; மொழிந்த தேனுடை - பேசுகின்ற தேன் போன்ற இனிய
சொற்களை உடைய;  முகிழ் முலை ஆய்ச்சியர் - (கோங்கின்) அரும்பு
போன்ற முலைகளை உடைய ஆய்ச்சியர்; முழவில் பிழிந்த - குடங்களில்
கறந்த; பால் வழி நுரையினை - பாலினின்று மேலே வழிகின்ற நுரையினை;
பொருவின -
ஒத்து விளங்கின.

     ஆம்பிகள் கட்டித் தயிர் போலவும், பிடவம் பால் நுரை போலவும்
விளங்கின.  நிறமும் வடிவும் பற்றி வந்த உவமைகள்.  முல்லை நிலத்துப்
பொருள்களுக்கு அந்நிலத்துப் பொருள்களே உவமை கூறப்பட்டன.  வயிறு
நிறைய உண்ட பசுக்கள் காளான்களைச் சிதைக்கும் இயல்பின என்பதை
'மாற்றார் குடையெல்லாம் கீழ்மேலாய் ஆஉதை காளாம்பி போன்ற' (களவழி -
36) என்றதால் காண்க.  காளானுக்குத் தயிர்த் துணக்குகள் உவமை. 'ஆம்பி
வான் முகையன்ன கூம்பு முகிழ் உறையமை தீந்தயிர்' (பெரும்பாண் - 157 - 8)
தேன் - உவமை ஆகுபெயராய்ச் சொல்லை உணர்த்தியது. பிடவம் - கார்
காலத்தில் மலரும் முல்லை நிலத்து மலர். இதனைக் குட்டிப் பிடவம் என்னும்
ஒரு கொடி என்பர் அடியார்க்கு நல்லார். (சிலப் - 13 - 158. உரை) 'சேணாறு
பிடவமொடு பைம் புதல் எருக்கி' (முல்லை - 25) என்றது காண்க.  பிடவம்
ஆகுபெயராய் மலர்களை உணர்த்திற்று.  பால் மிகுதி நோக்கிப் 'பிழிந்க'
என்றார்.                                                    47