இராமன் மன நிலை 4196. | தேரைக் கொண்ட பேர் அல்குலாள் திருமுகம் காணான், ஆரைக் கண்டு உயிர் ஆற்றுவான்? நல் உணர்வு அழிந்தான்; மாரற்கு எண் இல் பல் ஆயிரம் மலர்க் கணை வகுத்த காரைக் கண்டனன்; வெந் துயர்க்கு ஒரு கரை காணான். |
தேரைக் கொண்ட - தேர்த் தட்டை ஒத்த; பேர்அல்குலாள் - அகன்ற அல்குலை உடைய சீதையின்; திருமுகம் காணான் - அழகிய முகத்தைக் காணாதவனாகிய இராமன்; மாரற்கு - மன்மதனுக்கு; எண் இல் பல் ஆயிரம்- எண்ணற்ற பல ஆயிரக்கணக்கான; மலர்க்கணை வகுத்த - மலர் அம்புகளைச் செய்து கொடுத்த; காரைக் கண்டான் - அந்தக் கார்காலத்தைக் கண்டு; வெந்துயர்க்கு - (தன்) கொடிய துன்பமாகிய கடலுக்கு; ஒரு கரை காணான் - கரை காணாதவனாய்; நல் உணர்வு அழிந்தான் - நல்ல அறிவை இழந்தவனானான். ஆரைக்கண்டு உயிர் ஆற்றுவான் - இனி யாரைக் கண்டு தன் துயர் குறைத்து உயிரை வைத்துக் கொண்டிருப்பான்? கார் காலத்தில் பல்வேறு மலர்கள் மலர்ந்து இராமனுக்குத் துன்பம் விளைவித்தன. 'எண்ணில் பல்லாயிரம் மலர்க்கணை வகுத்த' என்ற தொடர் கார் காலத்தில் மலர்கள் மிகுந்து மலர்ந்ததைக் குறித்தது. மலர்கள் இயற்கையாக மலரக் கார் காலம் மன்மதனுக்கு மலரம்புகளைத் தந்தது எனக் கூறியது தற்குறிப்பேற்ற அணியாகும். சீதையின் திருமுகத்தைக் காணாமையால் ஏற்படும் துயரத்தை உலகில் வேறொரு பொருளைக் கண்டு ஆற்ற இயலாது ஆதலின் 'ஆரைக் கண்டு உயிர் ஆற்றுவான்' என்றார். கார்காலம் பிரிவுத் துயரை அதிகப்படுத்துவதோடு, மலர் அம்புகளையும் மன்மதனுக்குக் கொடுத்து உதவியது என்பதில் கார்காலம் இராமனுக்குச் செய்யும் கொடுமையின் கடுமை புலப்படுகிறது. காரைக் கண்டனன். . . . . ஒரு கரை காணான் என்ற தொடரில் கண்டனன் காணான் முரண் தொடை நயம் காண்க. கரை காணான் என்றதால் வெந்துயர்க் கடல் என்ற உருவகம் போந்தது. அவ்வாறு பெறவைத்தமையால் இது குறிப்பு உருவகம். 49 |