4204. | 'பயில் பாடக மெல் அடி பஞ்சு அனையார் செயிர் ஏதும் இலாரோடு தீருதியோ? அயிராது உடனே அகல்வாய் அலையோ? உயிரே! கெடுவாய்! உறவு ஓர்கிலையோ? |
உயிரே - என் உயிரே; பயில் பாடக மெல்லடி - பொருந்திய பாடகம் என்னும் அணியை அணிந்த மெல்லிய பாதம்; பஞ்சு அனையார் - பஞ்சுபோல் மென்மையாய் இருக்கப் பெற்றவரும்; செயிர் ஏதும் இலாரொடு - எந்த விதக் குற்றமும் இல்லாதவராகிய சீதையோடு; தீருதியோ - (நீயும்) என்னை விட்டு நீங்கிச் செல்வாயோ? அயிராது - (அங்ஙனம் செல்வதனால்) ஐயம் கொள்ளாமல்; உடனே அகல்வாய் அலையோ - அவருடன் சென்றிருப்பாய் அல்லையோ? கெடுவாய் - கேடு அடைந்தைையே? உறவு ஓர்கிலையோ - எனக்கும், சீதைக்கும் உள்ள ஒன்றிய உறவை நீ அறியவில்லையோ? பாடகம் - மகளிர் காலில் அணியும் ஒரு வகை அணி. இராவணனால் கவரப்படினும் மாசற்று இருந்தவராதலின் 'செயிர் - ஏதும் இலாரோடு' என்றான். 'எனக்கும் என் உயிராகிய சீதைக்கும் உள்ள உறவை நீ உணராயோ? அங்ஙனம உணர்ந்திருப்பின், அவர் சென்றவன் நீ உடன் சென்றிருப்பாய்' எனக் கூறி, இராமன் புலம்பினான். கார்காலத்தில் சீதையைப் பிரிந்து வருந்தும் துயரத்தை விட, உயிர் பிரிதல் நல்லது எனத் துயரத்தின் மிகுதியை உயிர் மேல் வைத்துப் புலப்படுத்தியதாகும். இத்தகைய உயிர்த் தொடர்பைச் ''செரு ஆர்தோள! நின் சிந்தை உளேன் எனின், மருவார் வெஞ்சரம் எனையும் வவ்வுமால், ஒருவேனுள் உளை ஆகின், உய்தியால்; இருவேமுள் இருவேம் இருந்திலேம்'' (4104) என்ற தாரை புலம்பலில் காணலாம். 57 |