கூதிர் காலம் 4217. | சொற்ற தம்பி உரைக்கு உணர்ந்து, உயிர் சோர்வு ஒடுங்கிய தொல்லையோன்; இற்ற இன்னல் இயக்கம் எய்திட, வைகல் பற்பல ஏக, மேல் உற்று நின்ற வினைக் கொடும் பிணி, ஒன்றின்மேல் உடன் ஒன்று உராய், மற்றும் வெம் பிணி பற்றினாலென, வந்து எதிர்ந்தது மாரியே. |
உயிர் சோர்வு ஒடுங்கிய தொல்லையோன் - (கார்காலத்தின் பிடியில் உடலும் உள்ளமும் ஒருங்கே ஒடுங்க) உயிர்த்தளர்ச்சியுற்ற பழை யோனாகிய (திருமாலின் கூறான) இராமன்; சொற்ற தம்பி- தேறுதல் கூறிய தம்பியான இலக்குவனின்; உரைக்கு உணர்ந்து - சொற்களால் தெளிவு பெற்று; இற்ற இன்னல் - துன்பம் நீங்கியவனாய்; இயக்கம் எய்திட - நடமாட்டம் கொள்ள; வைகல் பற்பல ஏக - (அவ்வாறு) பற்பல நாட்கள் கழிய; மேல் - பின்பு; உற்று நின்ற வினைக் கொடும் பிணி ஒன்றின் மேல் - (முன்னமே) உடம்பில் பொருந்தி நின்ற ஊழ்வினை வயத்தால் கொடிதாகிய நோய்; உடன் உராய் பற்றினால் என - உடன் வந்து பற்றிக் கொண்டது போல; மாரி வந்து எதிர்ந்தது - கூதிர்காலம் வந்து தோன்றியது. 'வெந்துயர் விரவு திங்களும் விரைவு சென்றன' (4214) என இலக்குவன் ஆறுதல் உரையில் கூறினும், பல நாட்கள் கழிந்த பின்னரே கார்காலம் முடிந்தது என்பதை 'வைகல் பற்பல ஏக' என்ற தொடர் உணர்த்திற்று. உரைக்கு - உரையினால் எனக் கொள்க; உருபு மயக்கம்; இராமனின் கடவுட்டன்மையைத் 'தொல்லையோன்' என்ற சொல் உணர்த்தும். உடம்பு பெற்ற அளவில் செய்த வினை தன் பயன் விளைக்க வந்து சேருமாதலின் 'உற்று' என்றார். வினையால் ஏற்பட்ட பிணியாகலின் 'கொடும்பிணி' எனப்பட்டது. ஒரு நோயின் மேல், மற்றொரு நோயும் வந்து பொருந்தியது போல முன்னர்ப் பெய்த மழை இராமனை வருத்தவும், அதற்குமேல் வருத்தம் விளைவிக்கப் பின் மழையும் பெய்யத் தொடங்கியது என்க. உவமை அணி. முன்னர்ப் பெய்த மழை கொடும்பிணி போன்றது ஆகப் பின்னர்ப் பெய்த மழை அக்கொடும்பிணியுடன் மற்றொரு வெம்பிணி சேர்ந்து கொண்டது போன்றது எனக் கூறியதால், முன்னர்ப் பெய்த கார்கால மழையினும், கூதிர் கால மழை அதிக துன்பத்தை அளிக்கும் என உணர்த்தப்பட்டது. 70 |