4219. பாசிழை அரம்பையர்,
      பழிப்பு இல் அகல் அல்குல்
தூசு, தொடர் ஊசல், நனி
     வெம்மை தொடர்வுற்றே
வீசியது, வாடை - எரி
      வெந்த விரி புண் வீழ்
ஆசு இல் அயில் வாளி என,
      ஆசைபுரிவார்மேல்.

     வாடை - வாடைக்காற்றானது; பாசிழை அரம்பையர் -
பசும்பொன்னாலாகிய அணி கலன்களை அணிந்த மகளிரின்; பழிப்பு இல்
அகல் அல்குல் -
குற்றமற்ற அகன்ற மறைவிடத்தை மறைத்த; தூசு -
ஆடையினையும்; தொடர் ஊசல் - சங்கிலிகளால் இணைக்கப்பட்ட
ஊஞ்சலினையும்; தொடர்வுற்று - சார்ந்து; ஆசை புரிவார்மேல் -
(அவர்கள்மேல்) காதல் கொண்டவர்களான ஆண்கள் மீது; எரிவெந்த
விரிபுண் -
 நெருப்புப் பட்டு வெந்து பரந்த புண்ணில்; வீழ் - விழுந்து
தைக்கும்; ஆகஇல்அயில் வாளி என - குற்றமற்ற கூர்மையான அம்பு
போல; நனி வெம்மை வீசியது - மிகுந்த வெப்பம் உண்டாகும்படி வீசிற்று.

     மகளிர் அழகைக் கண்டு அவர்கள் பால் காதல் கொண்டு தவிக்கின்ற
ஆடவர் மேல், அம்மகளிர் அணிந்த ஆடை மீதும், ஆடிய ஊஞ்சலின் மீதும்
பட்டு வருகின்ற வாடைக்காற்று வீசி வெம்மை செய்து வருத்தியது.
இயல்பாகவே வருந்தி நிற்கும் ஆடவர் மீது வாடைக் காற்று வீசி, மேலும்
வருத்தியமைக்கு வெந்த விரி புண்ணின்கண் வேல் கொண்டு
நுழைப்பான்போல் காய்ந்த நோய் உழப்பாரைக் கலக்கிய வந்தாயோ'' (கலி -
120) 'எறிவேல் பாய்ந்த புண்ணில் ஆம் பெரும் புழையில் கனல்
நுழைந்தாலென' (325) என்பன ஈண்டு ஒப்பு நோக்கத்தக்கன.  வாடை
காதலருக்கு வெப்பம் பெருக வீசுவதைத் 'தழல் வீசி உலாவரு வாடை தழீஇ'
(5232) என்ற அடியும் உணர்த்தும்.                                72