4222. | நிறம் கருகு கங்குல், பகல், நின்ற நிலை நீவா அறம் கருது சிந்தை முனி அந்தணரின், ஆலிப் பிறங்கு அரு நெடுந் துளி படப் பெயர்வு இல்குன்றில், உறங்கல, பிறங்கல் அயல் நின்ற, உயர் வேழம். |
நிறம் கருகு கங்குல் - நிறம் கறுத்துத் தோன்றுகின்ற இரவுக் காலத்திலும்; பகல் - பகல் வேளையிலும்; நின்ற நிலை நீவா - தாம் நின்ற தவநிலையிலிருந்தும் நீங்காமல்; அறம் கருது சிந்தை - அறத்தையே நினைக்கின்ற சிந்தையுடையவர்களாய்; முனி அந்தணரின் - (எல்லாப் பற்றுக்களையும்) வெறுத்தொதுக்கிய முனிவர்கள்போலவும். பிறங்கு அரு ஆலி நெடுந்துளி பட - ஆலங்கட்டிகளோடு விளங்குகின்ற அரிய மழையின் பெரிய மழைத்தாரைகள் தம் மேல் பட; பெயர்வுஇல் குன்றில் - அசைதல் இல்லாத குன்று போலவும்; உயர்வேழம் - உயர்ந்த யானைகள்; உறங்கல - உறக்கம் கொள்ளாதனவாய்; பிறங்கல் அயல் நின்ற - மலைப்பக்கங்களில் அசையாது நின்றன. மழைகள் உறங்காமல், அசையாமல் இருந்த யானைகளுக்கு முனிவர்களும், மலையும் உவமை. அந்தணரைப் போல உறங்காமலும், குன்று போல அசையாமலும் என முறையே இயைந்து பொருள்படுதல் பற்றி முறை நிரல் நிறை அணி எனப்படும். பெயர்வு இல் குன்று - 'அசலம்' என மலைக்கு ஒரு பெயராதல் காண்க. மழைக்காலத்து உறங்கா நிலையில் மலையை அடுத்து அசையாது யானைகள் நின்று கொண்டிருந்தன. குறிஞ்சி நிலத்துக் கூதிர்காலக் காட்சி இப் பாடலில்கூறப்பெற்றது. 75 |