4224. | ஆசு இல் சுனை வால் அருவி, ஆய் இழையர் ஐம்பால் வாச மணம் நாறல் இல ஆன; மணி வன் கால் ஊசல் வறிது ஆன; இதண் ஒண் மணிகள் விண்மேல் வீசல் இல வான; - நெடு மாரி துளி வீச. |
நெடு மாரி துளி வீச - (வானம்) பெரிய மழைத் துளிகளைப் பெய்து கொண்டிருப்பதால்; ஆசு இல் சுனை - குற்றமில்லாத மலைச் சுனைகளும்; வால் அருவி - தூய மலை அருவிகளும்; ஆய் இழையர் - ஆய்ந்த அணிகலன்களை அணிந்த மகளிரின்; ஐமபால் வாச மணம் - கூந்தலின் நறுமணம்; நாறல் இல ஆன - (தம்மிடம்) கமழப்பெறாதன ஆயின; மணி வன் கால் ஊசல் - மணிகள் பதிக்கப் பெற்ற வலிமையான கம்பங்களில் அமைக்கப் பெற்ற ஊஞ்சல்கள்; வறிது ஆன - (அம்மகளிர் ஆடாமையால்) ஆடுவார் இல்லாதன வாயின்; இதண் - பரண்கள்; ஒண்மணிகள் விண்மேல் - ஒளி பொருந்திய இரத்தினங்களை வானத்தில்; வீசல் இலவான - (பறவைகளின் மீது) எறிதல் இல்லாதன ஆயின. மழைத்துளி விடாமல் பெய்து கொண்டிருந்ததால் மலையிலுள்ள சுனைகளிலும் அருவிகளிலும் பெண்கள் நீராடாமையால் அவர்கள் கூந்தலின் இயற்கை மணத்தையும், வாசநெய்யாலும், அகிற்புகையாலும் நறுமலராலும் பெறும் செயற்கை மணத்தையும் அச்சுனைகளும் அருவிகளும் பெறாதன ஆயின. வாசமணம் ஒரு பொருட்பன்மொழி. ஆசில் சுனை - பாசி படிதல், சருகு முதலிய குப்பைகளுடன் விளங்கல், படிந்தார்க்கு நோய் விளைத்தல் ஆகிய குற்றங்கள் நீங்கித் தூய நீரைக் கொண்டிருத்தல். ஐம்பால் - ஐந்துவகையாக முடித்தற்குரியது என்பதால் கூந்தல் 'ஐம்பால்' எனக்கூறப்பட்டது. (4195 ஆம் பாடல் உரைவிளக்கம் காண்க) குளிரால் மகளிர் ஊஞ்சலாடுவதையும் தவிர்த்தலால் ஊஞ்சல்கள் ஆடுவாரின்றி வெறுமை ஆயின. மலைவாழ்நரின் செல்வச் சிறப்பு தோன்ற 'மணிவன் கால்' என்றார். குறிஞ்சி நில மகளிர் மணிகள் கொண்டு கவண் எறிந்து பறவைகளை ஓட்டும் இயல்பான நிகழ்ச்சியும் மழையால் தடைப்பட்டது. செல்வ வளத்தால் மகளிர் மணிகளை எறிவர் என்ற செய்தியைப் பட்டினப்பாலை உணர்த்துகிறது. கோழியெறிந்த கொடுங்கால் கனங்குழை (ப.பாலை வரி - 23) என்ற அடி ஈண்டுஒப்புநோக்கத்தக்கது. 77 |