4226. | பதங்கள் முகில் ஒத்த, இசை பல் ஞிமிறு பன்ன, விதங்களின் நடித்திடு விகற்ப வழி மேவும் மதங்கியரை ஒத்த, மயில்; வைகு மர மூலத்து ஒதுங்கின, உழைக் குலம்; - மழைக் குலம் முழக்க. |
பதங்கள் - பறவைகளின் ஒலி; முகில் ஒத்த - மேகத்தின் ஒலியை ஒத்தனவாக விளங்க; பல் ஞிமிறு - பலவகைப்பட்ட வண்டுகளின்; இசை பன்ன - (ரீங்காரம்) இசைப்பாடலாக ஒலிக்க; மயில் - மயில்கள்; விதங்களின் நடித்திடும் - பல வகைத் தாள அமைப்புகளுடன் நடனம் செய்கின்ற; விகற்ப வழி - வெவ்வேறு வகைப்பட்ட நாட்டிய நிலைகளில்; மேவும் மதங்கியரை ஒத்த - பொருந்திக் கூத்தாடும் மகளிரை ஒத்தன; உழைக்குலம் - மான் கூட்டங்கள்; மழைக்குலம் முழக்க - மேகக் கூட்டங்களின் முழக்கத்தால் (கலக்கமுற்று); வைகு மர மூலத்து - (மயில்கள்) தங்கப்பெற்ற மரங்களின் அடியில்; ஒதுங்கின - ஒதுங்கி நின்றன. பதங்கள் - பறவைப் பொதுப்பெயர். இவ்வடசொல் எழுப்பிச் செல்வ தென்று பொருள்படும். மதங்கியர் - இளம்வயதுடைய நாட்டிய மகளிர், பதங்கத்தின் ஒலி முழவாக, வண்டுகளின் ரீங்காரம் பாட்டாக, மயில்கள் மதங்கியரைப் போல ஆட, மான்கள் அந்த ஆட்டத்தைப் பார்த்தன என்க. உழைக்குலம் மழைக்குலம் என்ற இடத்து இணையெதுகை நயம் காண்க. மழைக்காலத்தில் மயில்கள் மகிழ்ந்து ஆடுவதையும் மான்கள் வருந்தி ஒடுங்குவதையும் இச்செய்யுள் புலப்படுத்துகிறது. 79 |