4228. | தாமரை மலர்த் தவிசு இகந்து, தகை அன்னம், மாமரம் நிரைத் தொகு பொதும்பருழை வைக; தே மரம் அடுக்கு இதணிடைச் செறி குரம்பை, தூ மருவு எயிற்றியரொடு அன்பர் துயில்வுற்றார். |
தகை அன்னம் - அழகிய அன்னப்பறவைகள்; தாமரை மலர்த் தவிசு இகந்து - தாமரை மலராகிய தங்கள் இருப்பிடத்தை விட்டு நீங்கி; மா மரம் நிரைதொகு - பெரிய மரங்கள் வரிசையாகத் திரண்ட; பொதும்பர் உழை வைக - சோலையில் சென்று தங்க; தேமரம் அடுக்கு - நறுமணம் மிக்க மரக்கட்டைகளை அடுக்கியமைத்த; இதணிடை செறி குரம்பை - பரணில் பொருந்திய குடிசையில்; தூ மருவு எயிற்றியரொடு - வெண்ணிறம் பொருந்திய பற்களையுடைய வேட்டுவப் பெண்களுடனே; அன்பர் துயில்வுற்றார் - அவர்களின் அன்புமிக்க கணவர்கள் உறங்கினார்கள். குளிரால் வருந்திய அன்னம் நீரிலுள்ள தாமரை மலரை விட்டுக் குளிர் இல்லாத உயர்ந்த கிளைகளை உடைய மரங்கள் செறிந்த சோலையில் சென்று தங்கியது; பறவைகள் வாராத மழைக்காலத்தில் தினைப்புனம் காக்கும் வேலையின்மையால் வேட்டுவ மகளிரும வேடர்களும் குளிர்நீங்கப் பரண் குடிசைகளில் உறங்கினர். தவிசு - ஆசனம், தேமரம் - சந்தனம் முதலிய மரங்கள். வைகத் துயில்வுற்றார் எனக் காரண காரியத்தொடர்பின்றிச் செயவெனெச்சம் வினை கொண்டுமுடிந்தது. 81 |