4229. | வள்ளி புடை சுற்றி உயர் சிற்றலை மரம்தோறு, எள்ள அரு மறிக் குருளொடு அண்டர்கள் இருந்தார்; கள்ளரின் ஒளித்து உழல் நெடுங் கழுது ஒடுங்கி, முள் எயிற தின்று, பசி மூழ்கிட இருந்த. |
வள்ளி புடை சுற்றி - கொடிகளால் பக்கங்களில் சூழப்பெற்று; உயர் சிற்றிலை - உயர்ந்து வளர்ந்துள்ள சிறிய இலைகளை உடைய; மரம் தோறு - மரங்கள் தோறும்; எள்ள அரு மறிக் குருளொடு - (அவற்றின் கீழ்) இகழாமல் பாதுகாத்தற்குரிய ஆட்டுக்குட்டிளோடு; அண்டர்கள் இருந்தார் - இடையர்கள் தங்கியிருந்தார்கள்; கள்ளரின் ஒளித்து உழல் - திருடர்களைப் போல மறைந்து திரிகின்ற; நெடுங் கழுகு ஒடுங்கி - பெரிய பேய்களும் குளிரால் ஒடுங்கி; முள் எயிறு தின்று - முட்கள் போன்ற தம் பற்களைத் தாமே மென்று தின்று கொண்டு; பசி மூழ்கிட இருந்த - மிக்க பசியுடன் இருந்தன. தன் கீழ் உள்ளார்மேல் நீர்படாமல் காப்பதில் பெரிய இலைகளை உடைய மரத்தினும் சிறிய இலைகளை உடைய மரமே சிறந்ததாதலால் இடையர்கள் கொடிகள் சூழ்ந்த சிற்றிலை மரங்களின் அடியில் தங்கினர். வள்ளி - வள்ளிக் கொடி என்றும், சிற்றிலை - சிற்றிலை மரமென்னும் ஒரு வகை மரம் என்றும் பொருள் கொள்வர். தம்மைத் தாமே பாதுகாத்துக் கொள்ளும் ஆற்றலற்றன என்பதால் ஆட்டுக் குட்டிகள் இகழாமல் பாதுகாத்தற்கு உரியனவாகின்றன. அவற்றை இடையர்கள் உடன் கொண்டு சென்றனர் என்பதால் அவற்றின் அருமை புலனாகும். குருளை என்பது குருள் என விகாரப்பட்டு வந்தது. நெடிதாகிய பேயும் மழையால் ஒடுங்கித் தோன்றிற்று என்பார்'நெடுங்கழுதுஒடுங்கி' என்றார். மழையால் பேய்களும் வெளிக்கிளம்ப முடியாது ஒடுங்கிப் பசியில் மூழ்கிப் பற்களைமென்று தின்று கொண்டிருந்தன என மழைமிகுதியை உணர்த்தினார். மழையால் பேய் வருந்துவதைப் 'பெயலு மோவாது கழுதுகண் பனிப்ப வீசும்' (குறுந் - 161) என்ற தொடர் உணர்த்தும். 'பசிக்கலைந்து பாதி நாக்கும் உதடுகளில் பாதியும் தின்றொறுவாயானேம்' (கலிங். பரணி - 217) என்பது ஈண்டு ஒப்பு நோக்கத் தக்கது. 82 |