4233. | 'தூ நிறச் சுடு சரம், தூணி தூங்கிட, வான் உறப் பிறங்கிய வைரத் தோளொடும், யான் உறக் கடவதே இதுவும்? இந் நிலை வேல் நிறுத்து உற்றது ஒத்துழியும், வீகிலேன். |
தூ நிறச் சுடு சரம் - தம்முனைகளில் ஊன் படிந்தவனவாய்ப் பகைவர் மார்பைத் துளைக்கவல்ல அம்புகள்; தூணி தூங்கிட - (செயலற்று) அம்பறாத்தூணியில் தூங்கி்க் கிடக்க; வான் உறப்பிறங்கிய - வானளாவ உயர்ந்த விளங்கிய; வயிரத் தோளொடும் - உறுதியுள்ள புயங்களுடனே; யான் இதுவும் உறக்கடவதே - நான் இத்தகைய துன்பத்தையும் அனுபவிக்க வேண்டுமோ?இந்நிலை - எனக்கு ஏற்பட்டுள்ள இந்த நிலைமை; வேல் நிறத்து உற்றது ஒத்துழியும் - வேல் என் மார்பகத்துப் பாய்ந்தது போன்றிருக்கவும்; வீகிலேன் - நான் இறவாமல்இருக்கின்றேனே! பகைவர் மார்பில் பட்டு ஊன் தோய்ந்திருத்தல் பற்றித் 'தூநிறச் சரம்' என்றும், பகைவர்ககளச் சுடவல்லது ஆதலின் 'சுடுசரம்' எனவும் சிறப்பித்தார். 'நின்கைச் சுடு சரம் அனைய சொல்லால்' (472) என்றதும் காண்க. தூங்குதல் - தொங்குதல், செயலற்றுக் கிடத்தல் என இரு பொருள்பட அமைந்துள்ளது. பகைவரை வெல்லவல்ல படைவலிமையும் தோள்வலிமையும் பெற்றிருந்தும் தீங்கு செய்தவனைத் தண்டிக்காது துன்பத்தை அனுபவிக்கும் நிலை தனக்கு வருதல் வேண்டுமா என இராமன் கலங்கினான். இந்நிலை தனக்கு வரலாகாது என்பானாய் இதுவும் உறக்கடவதே' என்றான். தன் தோளின் உயர்வும் வலிமையும் தோன்ற 'வானுறப் பிறங்கிய வயிரத் தோள்' என்றான். மார்பில் வேல் பட்டாற்போல் இவ்வளவு துன்பத்தை அனுபவித்துக் கொண்டு வாழ்தலும் வேண்டுமோ, இறத்தலே ஏற்றதன்றோ என இராமன் வருந்தும் நிலையைக் காண்கிறோம். ஒத்துழி - ஒத்த உழி என்பதன் தொகுத்தல் - ஒத்துழியும் - உம்மை இழிவு சிறப்பும்மை. 86 |