4234. | 'தெரி கணை மலரொடும் திறந்த நெஞ்சோடும், அரிய வன் துயரொடும், யானும் வைகுவேன்; எரியும் மின்மினி மணி விளக்கின், இன் துணைக் குரிஇனம், பெடையோடும் துயில்வ, கூட்டினுள். |
குரிஇனம் - குருவிக்கூட்டங்கள்; எரியும் மின்மினி - ஒளிவிடுகின்ற மின்மினிப்பூச்சிகளாகிய; மணி விளக்கின் - அழகிய விளக்கின் ஒளியில்; இன்துணைப் பெடையோடும் - தன் இனிய துணையாகிய பெண் குருவிகளோடு; கூட்டினுள் துயில்வ - கூட்டினுள் (இன்பமாய்) உறங்குகின்றன; யானும் - நானும்; தெரிகணை மலரொடும் - மன்மதன் ஆராய்ந்து எய்த மலர்களாகிய அம்புகளால்; திறந்த நெஞ்சொடும் - பிளவுற்ற நெஞ்சத்தோடும்; அரிய வன் துயரொடும் - பொறுத்தற்கரிய கொடிய துன்பத்தோடும்; வைகுவேன் - (சீதையைப் பிரிந்து) காட்டில் தங்கியிருக்கிறேன். பறவையினத்தைச் சார்ந்த குருவிக்கு அமைந்த இன்ப வாழ்க்கைகூட, உயர்ந்த மானிடப்பிறவில் தோன்றிய தனக்குக் கிடைக்காமல் போய்விட்டதே என இராமன் வருந்திக் கூறியது இப்பாடல். 'கூட்டினுள்' என்று கூறியதற்கேற்பக் 'காட்டில்' என்பதும், 'மின்மினி மணி விளக்கின்' என்பதற்கேற்ப 'இருளில்' என்பதும் கொள்ளவேண்டும். குருவிகள் மின்மினிப் பூச்சிகளின் ஒளியில் தம் கூடுகளில் பெடையொடு துயிலத் தான் இருளில், வனத்தில துணையின்றித் துயிலாது உள்ளேனே எனப் பொருள் விரித்துக் கொள்ளல் வேண்டும். மின்மினியைக் குருவிகள் (வெளிச்சத்திற்காகத்) தம் கூட்டில் வைத்தல் உண்டு என்பதைத் 'தகைசால் மணி மேட்டு இமைப்பன;'மின்மினி ஆம்' எனக் கூட்டின் உய்க்கும் குரீஇயின் குழாம்' (58) என்ற அடிகளால் அறியலாம். தம் துணையைப் பிரிந்து வாழ்பவர், துணையொடு வாழும் பிற உயிர்களைக் காண்கையில் பிரிவுத்துயர் மிக்கு மனம் தளர்வடைதல் இயல்பாகும். 'மயிலும் பெடையும் உடன் திரிய, மானும் கலையும் மருவிவர, பயிலும் பிடியும் கடகரியும் வருவ, திரிவ, பார்க்கின்றான்; குயிலும் கரும்பும், செழுந்தேனும், குழலும், யாழும், கொழும்பாகும், அயிலும் அமுதும், சுவை தீர்த்த மொழியைப் பிரிந்தான் அழியானோ? (3569) என்று முன்னரும் கவிச்சக்கரவர்த்தி குறிப்பது காண்க. குரீஇனம் என வரவேண்டியது எதுகை நோக்கி, 'குரிஇனம்' என்று வந்தது. 87 |