4239. 'நெய் அடை தீ எதிர் நிறுவி, ''நிற்கு இவள்
கையடை'' என்ற அச் சனகன் கட்டுரை
பொய் அடை ஆக்கிய பொறி இலேனோடு,
மெய் அடையாது; இனி, விளிதல் நன்றுஅரோ.

     நெய்அடை தீ எதிர்நிறுவி - நெய் ஊற்றி வளர்க்கப்பெற்ற தீ முன்னர்
(சீதையை) நிறுத்தி; 'நிற்கு இவள் கையடை' என்ற - 'உனக்கு இவள்
அடைக்கலப் பொருள்' என்று சொன்ன; அச்சனகன் கட்டுரை - அந்தச்
சனகரது மொழியை; பொய் அடை ஆக்கிய - பொய்யொடு பொருந்திய
சொற்களாகச் செய்துவிட்ட; பொறி இலேனொடு - நல்வினை
இல்லாதவனாகிய என்னிடத்தில்; மெய் அடையாது - உண்மை இருக்காது;
இனி விளிதல் நன்று -
(எனவே நான்) இனி இறத்தலே நல்லது.

     ஓமத்தீ வளர்த்து, அத்தீ முன்னர்ச் சீதையை ''உனது அடைக்கலப்
பொருள்'' எனக் கூறிச் சனகர். ஒப்படைத்ததை எண்ணி இராமன் கலங்கினான்.
''பூமகளும் பொருளும் என நீ என் மாமகள் தன்னொடும் மன்னுதி' என்னா,
தாமரை அன்ன தடக்கையின் ஈந்தான்' என்பது கம்பர் கூற்று (1245).
இங்ஙனம் ஒப்படைக்கப்பட்ட சீதையைக் கைப்பிடித்தான் இராமன் என்பதைத்
'தையல் தளிர்க்கை தடக்கை பிடித்தான்' (1248); பொற்றொடி கைக்கொடு
நல்மனை புக்கான்' (1251) என்ற அடிகள் உணர்த்தும்.  இதையே இராமன்
இங்குக் 'கையடை' என்றனன்.  சீதையைப் பாதுகாவாது விட்டதால் சனகன்
கூறிய கட்டுரை பொய்யாகுமாறு தான் நடந்து கொண்டதாகவும், அதனால்
தன்னிடம் வாய்மை நிலைத்தல் இல்லை என்றும் கூறி 'இங்ஙனம் பொய்யனாய்
வாழ்தலினும் இறத்தலே சிறந்தது' என்றான்.  கையடை - அடைக்கலம்,
தவறாமல் பாதுகாக்கத்தக்க பொருள் என்பது கருத்து.  தம்மிடம்
ஒப்படைத்ததைப் பாதுகாவாமல் விடுதல் பெரும்பாதகம் ஆதலின்
'பொறியிலேன்' என உரைத்தான்.  'தாளினில் அடைந்தவர் தம்மை, தற்கு ஒரு
கோள் உற, அஞ்சினன் கொடுத்த பேதையும் (2203) நரகிடை வீழ்வன் என்ற
பரதனின் சூளுரை அடைக்கலப் பொருளின் அருமையையும் அதனைக்
காக்கத் தவறியவர் நரகடைவர் என்பதையும் உணர்த்தும்.  'அடைக்கலம்
இழந்தேன் இடைக்குல மாக்காள்' (சிலம்பு - 27 - 75) எனக் கூறி மாதிரி
இடையிருள் யாமத்து எரியகம் புக்கது' காண்க. அரோ -அசை.          92