4240. | 'தேற்றுவாய், நீ உளையாக, தேறி நின் ஆற்றுவேன், நான் உளனாக, ஆய்வளை தோற்றுவாள் அல்லள்; இத் துன்பம் ஆர் இனி மாற்றுவார், துயர்க்கு ஒரு வரம்பு உண்டாகுமோ? |
தேற்றுவாய் நீ உளையாக - என்னைத் தேற்றுபவனாக நீ இருக்க; தேறி நின்று ஆற்றுவேன் - (அதனால்) ஆறுதல் அடைந்து மனம் தேறிப் பொறுத்துக் கொள்பவனாய்; நான் உளனாக - நான் இருக்க; ஆய்வளை - ஆய்ந்த வளையல்களை அணிந்த சீதை; தோற்றுவாள் அல்லள் - இங்கு வந்து (நம்முன்) தோன்றுபவள் அல்லள்; இத்துன்பம் ஆர் இனி மாற்றுவார் - இத்துன்பத்தை இனி யார் மாற்றுவார்கள்? (எவருமில்லை); துயர்க்கு ஒரு வரம்பு உண்டாகுமோ - (யான் அடையும்) துன்பத்திற்கு ஓர் எல்லையும் உண்டோ? இலக்குவன் தேற்றுதலும் இராமன் ஒருவாறு ஆற்றுதலும் நிகழ்கின்றனவே யன்றிச் சீதையின் தோற்றுதல் நிகழவில்லை. சீதை வராது போயின் இராமன் துயர் நீங்கும் வழியும் இல்லையாதலின் இராமன் அடையும் துயர்க்கு எல்லையும் இல்லை எனவாயிற்று. 'பிணிக்கு மருந்து பிறமன் அணியிழை தன் நோய்க்குத் தானே மருந்து' (குறள் - 1102) என்பது ஈண்டு ஒப்பு நோக்கத்தக்கது. சீதையைக் கண்டாலன்றி ஆறுதல் மொழிகளால் தன் துயர் நீங்காது எனத் தெளிவுபடுத்தினான் என்க. இலக்குவன் தேறுதல் கூறி இராமன் துன்பத்தைத் தணிவிப்பதைப் பல இடங்களில் காணலாம். 93 |