4241. 'விட்ட போர் வாளிகள்
      விரிஞ்சன் விண்ணையும்
சுட்டபோது, இமையவர்
      முதல தொல்லையோர்
பட்டபோது, உலகமும் உயிரும்
     பற்று அறக்
கட்டபோது, அல்லது,
      மயிலைக் காண்டுமோ?

     விட்ட போர் வாளிகள் - (யான் இனி) போரில் தொடுக்கின்ற
அம்புகள்; விரிஞ்சன் விண்ணையும் - பிரமனது சத்திய லோகத்தையும்;
சுட்ட போது (அல்லது) -
எரிப்பதோடல்லாமல்; இமையவர் முதல
தொல்லையோர் -
தேவர்கள் முதலான பழமையானவர்களை; பட்ட போது
(அல்லது)
- ஒழிப்பதோடல்லாமல்; உலகமும் உயிரும் - உலகங்களையும்
உயிர்களையும்; பற்று அறக் கட்டபோது அல்லது - வேரற அழித்துத்தான்;
மயிலைக் காண்டுமோ -
மயில் போன்ற சீதையைக் காண முடியுமோ?

     'விட்ட' என்பது விரைவு பற்றி வந்த காலவழுவமைதி. அல்லது என்பது
கடைநிலை விளக்காய்ச் சுட்டபோதல்லது, பட்ட போதல்லது என இயையும்
சீதையின் மென்சாயல் பற்றி 'மயில்' எனக் கூறினன்.  மயில் - உவமை
ஆகுபெயர்.                                                   94