4244. | 'திரைசெய் அத் திண் கடல், அமிழ்தம் செங் கணான் உரைசெயத் தரினும், அத் தொழில் உவந்திலன்; வரை முதல் கலப்பைகள் மாடு நாட்டி, தன் குரை மலர்த் தடக் கையால் கடைந்து கொண்டனன். |
திரைசெய் அத்திண்கடல் - அலைகள் வீசுகின்ற அந்த வலிய பாற்கடல்; அமிழ்தம் - தன்னிடமுள்ள அமிழ்தத்தை; செங்கணான் - சிவந்த கண்களையுடைய திருமால்; உரைசெய - (கொடு என்று) சொன்ன அளவிலே; தரினும் - கொடுக்கக் கடவதாயினும்; அத்தொழில் - அங்ஙனம் ஆணையால் எளிதில் பெறுவதை; உவந்திலன் - விரும்பாதவனாய்; வரை முதல் கலப்பைகள் - மந்தரமலை முதலிய கருவிகளை; மாடுநாட்டி - அக்கடலிடத்து நாட்டி; தன் குரை மலர்த் தடக்கையால் - (தோள் வளை முதலிய) அணிகலன்கள் ஒலிக்கப் பெற்ற செந்தாமரை மலர்போன்ற பெரிய கைகளால்; கடைந்து கொண்டனன் - (அக்கடலைக்) கடந்தே அமிழ்தத்தைப் பெற்றுக் கொண்டான். திருமால் தன் ஆணைக்கு அடங்கி நடக்கும் பாற்கடலிடத்து எளிதில் அமிழ்தத்தைப் பெறலாம்; எனினும் அங்ஙனம் பெறாது. மத்து முதலிய கருவிகளைக் கொண்டு தன் கையால் கடைந்தே அமிழ்தத்தைப் பெற்றான். அதுபோன்றே இராமன் நினைத்தால் வேறொருவர் துணையின்றியே உலகையும் உயிர்களையும் அழித்துப் பிராட்டியைக் காணும் ஆற்றல் பெற்றவன்; எனினும் வானரப்படைகளின் துணை கொண்டு தேடி முயன்று பகைவரை வென்று சீதையைக் காண்பதே முறையானது என்று இலக்குவன் உரைத்தான். இச்செய்யுள் பிறிது மொழிதலணி. திருமால் பாற்கடல் கடைந்ததை ''வடவரையை மத்தாக்கி வாசுகியை நாணாக்கிக் கடல் வண்ணன் பண்டொருநாள் கடல்வயிறு கலக்கினையே' (சிலப் - ஆய்ச்சி.32) என்ற அடிகளும் உணர்த்தும். 'பூவிற்குத் தாமரையே' (திருவள்ளுவ மாலை. 38) 'பூவினிற் கருங்கலம் பொங்கு தாமரை' (தேவா. 1182. 2) என்றாராகலின் மலர் இங்கே தாமரையைக் குறித்து நின்றது. அ - பண்டறிசுட்டு. தேவரும் அரக்கரும் பல காலம் கடைந்த கடலாதலின் 'திண்கடல்' எனப்பட்டது. வரை முதல் கலப்பைகள் - மந்தரமலை, வாசுகி, மேரு முதலியன. செங்கணான் - சிவந்த வரிகள் படர்ந்த கண்களை உடையவன். இங்கே திருமாலைக் குறித்தது. 'கண்ணும் திருவடியும் கையும் திருவாயும் செய்ய கரியவனை' என்கிறது சிலப்பதிகாரம் (ஆய்ச்சி. 36) குரைத்தல் - ஒலித்தல் - கடகம், வாகுவலயம் போன்ற அணிகள் ஒலிக்கப்பெறல்; வருந்திக் கடைதற்குப் பொருந்தாத மென்மையான கை என்பதை மலர்க்கை' என்ற தொடர் உணர்த்திற்கு. எத்துணை ஆற்றலுடையராயினும் ஒரு செயலைத் திறம்படப் புரியக் காலமும் கருவியும் இன்றியமையாதன என்பது இப்பாடலில் உணர்த்தப்பட்டது. 'ஞாலம் கருதினும் கைகூடும், காலம் கருதி இடத்தால் செயின்' (குறள் - 484) என்றதுகாண்க. 97 |