4247. | 'ஆகுநர் யாரையும் துணைவர் ஆக்கி், பின் ஏகுறு நாளிடை எய்தி, எண்ணுவ சேகு உறப் பல் முறை தெருட்டி, செய்தபின், வாகை என்று ஒரு பொருள் வழுவற்பாலதோ? |
ஆகுநர் யாரையும் - (நமது நோக்கத்திற்கு) உதவத்தக்கவர் எல்லோரையும்; துணைவர் ஆக்கி - துணைவர்களாக ஆக்கி்க் கொண்டு; எண்ணுவ -ஆலோசிக்க வேண்டிய செய்திகளை; சேகு உறப் - உறுதியாக; பல்முறை தெருட்டி - பலமுறை ஆலோசித்துத் தெளிந்து; பின் - பிறகு; ஏகுறு நாளிடை எய்தி - (செயல்மேல்) செல்லும் நாளில் செயலாற்றுமிடத்தை அடைந்து; செய்தபின் - (செயலைச்) செய்த பிறகு; வாகை என்று ஒரு பொருள் - வெற்றி என்று சொல்லக்கூடிய ஒரு பொருள்; வழுவற்பாலதோ - தவறக்கூடியதோ? (அன்று). உதவத்தக்கவர்களையே துணையாகக் கொள்ள வேண்டுதலின் 'ஆகுநர் யாரையும் துணைவர் ஆக்கி' என்றான். 'தக்கார் இனத்தனாய்த் தானொழுக வல்லானைச் செற்றார் செயக்கிடந்ததில்' என்பது குறள். (எண். 446). 'ஆகுநர் யாரையும் துணைவராக்கி' என்றதால் தனக்கு உதவாதவரை நீக்குதலும் புலப்படுத்தியவாறாயிற்று. அவதார நிகழ்ச்சிப்படி வாலி இராமனக்கு உதவ வேண்டியிருக்க அவன் இராவணனுக்கு நண்பனாகிவிட்டால் இராமன் அவன் நட்பினை நாடாமை அரசியல் சூழ்ச்சிக்கு ஏற்ற செயலே ஆயிற்று. 'பிரித்தலும் பேணிக் கொளலும் பிரிந்தார்ப் பொருத்தலும் வல்லதமைச்சு' (குறள் - 633) என்றது காண்க. சேக - மரவயிரம்; இங்கு உறுதிக்கு இலக்கணை. பல்முறை தெருட்டி - பலமுறை ஆராய்ந்து தெளிதல்; 'எண்ணித் துணிக கருமம்' என்பது வள்ளுவம். (குறள் 467). காலம் கருதி இடத்தால் செய்ய வேண்டுமாதலின் 'ஏகுறு நாளிடை எய்தி' என்றான். 'தெரிந்த இனத்தொடு தேர்ந்தெண்ணிச் செய்வார்க்கு அரும் பொருள் 'யாதொன்றும் இல்' (குறள் 462) என்பதால் 'வாகை என்றொரு பொருள் வழுவாற்பாலதோ?' என்றான். வெற்றி பெற்றவர் வாகைப்பூச் சூடுதல் மரபு ஆதலால் வெற்றிக்கு வாகை என்பது பெயராயிற்று. ஒரு செயல் வெற்றி பெறுதற்குரிய வழி இப்பாடலில் கூறப்பட்டது. 100 |