4249. | 'பைந்தொடிக்கு இடர் களை பருவம் பையவே வந்து அடுத்துளது; இனி, வருத்தம் நீங்குவாய்; அந்தணர்க்கு ஆகும் நாம், அரக்கர்க்கு ஆகுமோ? - சுந்தரத் தனு வலாய்! - சொல்லு, நீ' என்றான். |
பைந்தொடிக்கு இடர்களை பருவம் - பசும்பொன்னாலாகிய தொடியணிந்த பிராட்டிக்கு ஏற்பட்ட துன்பத்தை நீக்குதற்குரிய காலம்; பையவே வந்து அடுத்துளது - மெல்லவே வந்து சேர்ந்துளது; இனி வருத்தம் நீங்குவாய் - (அதனால்) இனிமேல் துன்பத்தைத் தவிர்ப்பாய். அந்தணர்க்கு ஆகும் நாம் - முனிவர்களுக்கு உதவுவதற்காக வந்துள்ள நாம்; அரக்கர்க்கு ஆகுமோ - அரக்கர்களுக்கு இலக்கு ஆவோமா? சுந் தரத் தனு வலாய் - அழகிய விற்போரில் வல்லவனே!நீ சொல்லு - நீ சொல்வாயாக; என்றான் - என்று (இலக்குவன்) கேட்டான். கூதிர்ப்பருவத்திற்கு அடுத்து வரும் பருவம் சீதையின் துன்பத்தைத் நீக்கும் பருவமாகும் என்பதால் 'இடர்களை பருவம்' என்றான். இடர் களைதலாவது இராவணைன் கொன்று சீதையை மீட்டலாகும். பருவம் வந்துளது என்னாது பருவம் வந்து அடுத்துளது என்ற நயம் காண்க. அதற்கேற்ப அடுத்த பாடலில் 'அறுதியை அடைந்தது அப்பருவம்' என்றான். ''முனிவர்களுக்குத் தீங்கு செய்கிற அரக்கர்களை அழித்து அவர்கட்கு உதவியாக இருக்கவேண்டிய நாம் அரக்கர்கள் செய்யும் துன்பங்களில் ஆழ்ந்துவிடுதல் தகுதியோ? அவ்வாறு துன்பத்தால் சோர்கையில் அந்தணர்களுக்கு உதவவும் இயலாது போய்விடுமன்றோ' எனத் தேறுதல் உரைத்தான். வில்லுக்குச் 'சுந்தரம்' (அழகு) என்றது அறந்தலை நிறுத்தலும், செந்நெறி செலுத்தலும் முதலியன (5885) காண்க. ஆகும் - முன்னது பெயரெச்சம். பின்னது - தன்மைப் பன்மை எதிர்கால வினைமுற்று. ''அரக்கரை ஆசு அறக்கொன்று, நல் அறம் புரக்க வந்தனம்' எனும் பெருமை பூண்ட நாம் (6430) ''மறந்த புல்லர் வலி தொலையேன் எனின். . . பிறந்து யான் பெறும் பேறு என்பது யாவதோ?'', ஆர் அறத்தினொடு அன்றி நின்றார் அவர் வேர் அறுப்பென்' (2649, 2652) என்பன ஈண்டு நோக்கத்தக்கன. 102 |