4252. தீவினை, நல்வினை,
      என்னத் தேற்றிய
பேய் வினைப் பொருள்தனை
      அறிந்து பெற்றது ஓர்
ஆய் வினை மெய்யுணர்வு
      அணுக, ஆசு அறும்
மாயையின் மாய்ந்தது -
     மாரிப் பேர் இருள்

     தீவினை நல்வினை என்ன - பாவச்செயலை நல்ல செயல் என்று
எண்ணுமாறு செய்யும்; பேய்வினை - பேயின் செயல்களைத் தூண்டும்;
பொருள்தனை -
செல்வத்தின் தன்மையை; அறிந்து - உணர்ந்து; பெற்றது
ஓர் -
அடையப்பெற்றதான ஒப்பற்ற; ஆய் வினை மெய்யுணர்வு -
ஆராய்தலினால் கிடைக்கின்ற மெய்ஞ்ஞானத்தால்; அணுக - (பொருட்பற்றை
விட்டுப் பரம்பொருளைச்) சார; ஆசு அறும் - குற்றமற்ற; மாயையின் -
மாயை நீங்குதல் போல; மாரிப் பேரிருள் - மழைக்காலத்தில் தோன்றிய
பெரிய இருள்; மாய்ந்தது - மறைந்தது.

     பொருளாசையானது தீவினையை நல்வினை என எண்ணச்செய்யும். மெய்
உணர்வால் பொருள் மீதுள்ள பற்றாகிய மாயை நீங்கும்.  அதுபோல
முன்பனிப் பருவம் வந்தவுடன் மழைக்காலத்துச்செறிந்த இருள் நீங்கியது
என்பது உவமையின் கருத்து.  பணம் பல கேடுகளைச் செய்யும் என்பதால்
அதனைப் 'பேய்வினை' என்றார்.  'செல்வம் வந்துற்ற காலைத் தெய்வத்தைச்
சிறிதும் பேணார்; சொல்வதை அறிந்து சொல்லார்; சுற்றமும துணையும்
நோக்கார்'' (வில்லி. பாரதம். கிருட்டி - 143); 'இன்னாதே கல்லார்கள் பட்ட
திரு' (குறள் - 408) என்றதும் காண்க.  மெய்யுணர்வு - தத்துவஞானம்
அதாவது இருவினைப் பயன்களையும் பிறப்பு வீடுகளையும் கடவுளின் இயல்பு
பற்றியும் ஐயம் திரிபற உள்ளபடி உணர்தலாகும்.  நல்லாசிரியரிடத்து உபதேசம்
கேட்டுத் தெளிந்தே மெய்யுணர்வு பெறலாகும் என்பதால் அதற்கான
முயற்சியை 'ஆய் வினை' என்றார்.  மெய்யுணர்வு தோன்றிய மாத்திரத்தே
அவர் மனம் பற்று நீங்கிப் பரம்பொருளைச் சார, அவரிடம் முன்பிருந்த
மாயை தானே நீங்கிப்போம்.  'இருள்நீங்கி இன்பம் பயக்கும் மருள்நீங்கி,
மாசறு காட்டிசியவர்க்கு' என்பது வள்ளுவம்.  (குறள் - 352) மருள், மயக்கம்,
அவித்தை, மாயை என்பன ஒரு பொருட் சொற்கள் இச்செய்யுள் குறிப்
புருவகம்.                                                     105