4254. தடுத்த தாள் நெடுந் தடங் கிரிகள் தாழ்வரை
அடுத்த நீர் ஒழிந்தன; அருவி தூங்கின;
எடுத்த நூல் உத்தரியத்தொடு எய்தி நின்று,
உடுத்த வால் நிறத் துகில் ஒழிந்த போன்றவே.

     தடுத்த தாள் - குறுக்கிட்டுத் தடுப்பன போன்ற அடிப்பகுதியை உடைய;
நெடுந்தடங்கிரிகள் -
உயர்ந்த பெரிய மலைகள்; தாழ்வரை அடுத்த -
அடிவாரத்தைச் சூழ்ந்து நின்ற; நீர் ஒழிந்தன - நீர் நீங்கப் பெற்றனவாய்;
அருவி தூங்கின -
அருவி மட்டும் ஒழுகப்பெற்றவையாகி; எடுத்த நூல்
உத்தரியத்தொடு -
தரித்த பூணூலாகிய உத்தரியத்துடன்; எய்தி நின்று -
பொருந்தி நின்று; உடுத்த வால் நிறத்துகில் - (தம்மைச்) சுற்றி உடுத்தியிருந்த
வெண்ணிறத்தை உடைய ஆடை; ஒழிந்த போன்றவே - நீங்கிய நிலையை
ஒத்து விளங்கின.

     மழைக்காலத்தில் தாழ்வரையைச் சூழ்ந்த வெள்ளநீர்
அரையாடையாகவும், மலையிலிருந்து பெருகிவரும் அருவிகள் உத்தரியம்
போலவும் விளங்கின.  மழை நீங்கியவுடன் மலையடிவாரத்தில் தங்கிய நீர்
வடிந்துவிட, அருவிகள் மட்டும் ஒழுகின.  அதனால் மலைகள் அரை
ஆடையின்றி, மேலாடையையும் நீக்கிவிட்டு உத்தரியத்தை மட்டும்
அணிந்திருந்தது போலக் காணப்பட்டது.  இல்லறத்தார் அரையில் உடுக்கும்
ஆடையோடு மேல் உத்தரியத்தை அணிவது விதி.  எப்பொழு தேனும்
மேலாடை அணியவில்லையயெனில், அதனால் உளதாகும் குற்றம் நீங்க,
இயல்பாக அணியும் இரட்டைப் பூணூலுடன் உத்தரியத்தின் பொருட்டு
மற்றொரு பூணூலையும் சேர்த்துத் தரித்துக் கொள்வது உண்டு என்பர்.
அருவி பெரிதாய் ஒழுகிய போது மேலாடை பூண்டது போல் விளங்கியது;
மழை நின்றதும் அருவி நீர் சிறிதாய் ஒழுகியபோது பூணூலாகிய
உத்தரியம் தரித்தது போல் காணப்பட்டது என வர்ணித்தார்.  இது
தற்குறிப்பேற்ற உவமை அணி. உத்தரியம் - மேலாடை.             107