4257. | பாசிழை மடந்தையர் பகட்டு வெம் முலை பூசிய சந்தனம், புழுகு, குங்குமம், மூசின முயங்கு சேறு உலர, மொண்டு உற வீசின, நறும் பொடி விண்டு, வாடையே. |
பாசிழை மடந்தையர் -பசும் பொன்னாலாகிய அணிகலன்களை அணிந்த மகளிரின்; பகட்டு வெம் முலை - பெரிய விரும்பத்தக்க மார்பகங்களில்; பூசிய சந்தனம் - பூசப்பட்ட சந்தனம்; புழுகு, குங்குமம் - புழுகு, குங்குமப்பூ; மூசின முயங்கு சேறு - (ஆகிய இவை) கலந்ததனாலாகிய கலவை மிகுதி; உலர - உலருமாறு; வாடை - வாடைக்காற்று; நறும்பொடி விண்டு - நறுமணமுள்ள மகரந்தப்பொடி களைச் (மலர்களினின்று) சேகரித்து; மொண்டு உற வீசின - நிறைய முகுந்து கொண்டு வந்து மிகுதியாக வீசிற்று. மகளிர் மார்பில் பூசிய சந்தனம் போன்ற கலவைச் சேறு உலரும்படி வாடைக்காற்று மலர்களின் மகரந்தப் பொடிகளை முகந்து வீசிற்று என்பதாம். முயங்கு சேறு என்றது கலவைச் சாந்தினை. அது குழம்பாக இருத்தலின் அப்பெயர் பெற்றது. வாடை - வடக்கிலிருந்து வீசும் காற்று. 'வாடைக்காற்று' எனப்பட்டது. காற்று மாறி மாறி வெவ்வேறு இடங்களில் வீசுவதால் 'வீசி' எனப்பன்மையில் கூறினார். 110 |