4259. தம் சிறை ஒடுங்கின,
      தழுவும் இன்னல,
நெஞ்சு உறு மம்மரும்
      நினைப்பும் நீண்டன, -
மஞ்சு உறு நெடு மழை
      பிரிதலால், மயில் -
அஞ்சின, மிதிலை நாட்டு
      அன்னம் என்னவே.

     மஞ்ச உறு நெடுமழை - மேகங்கள் பொருந்திய பெரிய மழைக் காலம்;
பிரிதலால் -
அகன்றுவிட்டதால்; மயில் - மயில்கள்; தம் சிறை ஒடுங்கின -
தம் சிறகுகளை ஒடுக்கிக் கொண்டனவாய்; தழுவும் இன்னல - பொருந்திய
துன்பத்தை உடையனவாய்; நெஞ்சு உறு மம் மரும் - உள்ளத்தில் கொண்ட
மயக்கமும்; நினைப்பும் நீண்டன - நினைவும் மிக்கனவாய்; மிதிலை நாட்டு
-
மிதிலை நாட்டில் பிறந்த; அன் னம் என்னவே - சீதையைப் போல;
அஞ்சின -
அஞ்சின.

     இராமனைப் பிரிந்த சீதை தன் உடம்பை ஒடுக்கி்க் கொண்டு, இன்னல்
நிறைந்தவளாய், மனத்தில் மயக்கமும் நினைவுகளுமாய வருந்தியிருத்தல் போல
மயில்களும் மழைக்காலம் பிரிதலால் சிறகுகளை ஒடுக்கிக் கொண்டு, துன்பம்
கொண்டனவாய் நினைவும்,  மயக்கமும் மிக்கனவாய் அஞ்சி ஒடுங்கின
என்பதாம்.  உவமை அணி நினைப்பு - மழைக்காலத்தில் தாம் எய்திய
இன்பங்களை நினைத்துப் பார்த்தால்.  கார் காலம் தொடங்கிய பொழுது
'ஆடின மயில்கள்' (4173) என்றதை நினைவு கொள்ளலாம்.  கார்காலத்தில்
மகிழ்ந்தாடிய மயில்கள், மழை நீங்கியவுடன் துன்புற்று ஒடுங்கும் இயல்பு
கூறப்பட்டது.  அன்னம் - உவமை ஆகுபெயராய்ச் சீதையை உணர்த்தியது.
                                                          112