4264. | சொல் நிறை கேள்வியின் தொடர்ந்த மாந்தரின், இல், நிறப் பசலை உற்று இருந்த மாதரின், தன் நிறம் பயப் பய நீங்கி் தள்ள அரும் பொன் நிறம் பொருந்தின, பூகத் தாறு எலாம். |
சொல்நிறை - புகழ் நிறைந்த; கேள்வியின் - கேள்வியைப் பெறுதல் பொருட்டு; தொடர்ந்த மாந்தரின் - (நல்லாசிரியரை வேண்டி) வேற்று நாட்டிற்குப் பிரிந்து சென்ற தலைவரால்; பசலை நிறம் உற்று - பசலை நிறத்தைப் பெற்று; இல் இருந்த மாதரின் - இல்லின்கண் இருந்த மகளிரைப் போல; பூகத்தாறு எலாம் - பாக்கு மரத்தின் குலை களெல்லாம்; தன் நிறம் பயப்பய நீங்கி - தமக்குரியதாக இருந்த பச்சை நிறம் மெல்ல மெல்ல நீங்கப் பெற்று; தள்ள அரும் - இகழ்ந்து தள்ள முடியாத (விரும்பத்தக்க); பொன் நிறம் பொருந்தின - பொன்னிறம் பொருந்தப் பெற்றன. பாக்கு மரத்தின் குலைகள் முற்றாத போது பசுமைநிறத்துடன் காணப்படும். முதிரும்போது பசுமை நிறம் மாறிப் பழுக்கையில் பொன்னிறம் அடையும். அதற்குக் கேள்வியின் பொருட்டுப் பிரிந்து சென்ற தலைவர்களின் பிரிவாற்றாமையால் பசலை நிறம் அடைந்த மகளிரை உவமை கூறினார். கற்புக்காலத்தில் தலைவன் பிரியும் ஓதற்பிரிவு இங்குக் கூறப்பட்டது. பசலை நிறம் என்பது தலைவரைப் பிரிந்தமையால் தலைவியர்க்கு உளதாகும் நிறவேறுபாடு. நாளுக்கு நாள் இயல்பான பசுமை நிறம் மாறிப் பொன்னிறம் அடையும் இயல்பை உணர்த்தத் 'தன்நிறம்' பயப்பய நீங்கி' என்றார். பொன்னிறத்தின் சிறப்புத் தோன்ற 'தள்ளரும் பொன்நிறம்' என்றார். பூகத்தாறு எலாம் தன் நிறம் பயப்பய - என்பதில் எதுகை நோக்கித் 'தம்நிறம்' என வரவேண்டியது 'தன்னிறம்' என வந்தது ஒருமைப் பன்மை மயக்கம். கூதிர்க்காலத்துக் கமுகின் ககய் பசுங்காயாய் இருக்கும் என்பதைத் 'தெண்ணீர்ப் பசுங்காய சேறுகொள முற்ற' (நெடுநல் - 26) என்ற அடி உணர்த்தும். 117 |