4265. பயின்று உடல் குளிர்ப்பவும்
      பழனம் நீத்து, அவண்
இயன்றன இள வெயில்
      ஏய்ந்த மெய்யின,
வயின்தொறும், வயின்தொறும்,
     மடித்த வாயின,
துயின்றன, இடங்கர்
      மா, தடங்கள்தோறுமே.

     இடங்கர் மா - முதலையாகிய விலங்குகள்; பயின்று - (தாம்
நெடுநாளாக நீரில்) பொருந்தி; உடல் குளிர்ப்பவும் - உடம்பு குளிர்ச்சி
அடைந்ததால்; பழனம் நீத்து - இது காறும் வாழ்ந்துவந்த நீர்நிலைகளை
விடுத்து; அவண் இயன்றன - அவ்விடத்திருந்த கரைகளில் வந்து
பொருந்தினவாய்; இளவெயில் ஏய்ந்த மெய்யின - இளவெயில் படியும்
உடம்புகளை உடையனவாய்; தடங்கள் தோறும் - நீர்நிலைகளின்
கரைகளிலெல்லாம்; வயின்தொறும் வயின்தொறும் - இடந்தோறும்
இடந்தோறும் (பற்பல இடங்களில்); மடித்த வாயின - மடித் வாய்களை
உடையனவாய்; துயின்றன - உறங்கின.

     மழைக்காலத்தில் நீரில் மூழ்கிக் கிடந்த முதலைகள், மழை நீங்கியதும்
நீர் நிலைகளை விட்டுக் கரையில் வந்து வெயிலில் குளிர் காய்வது
இயல்பாகும்.  முதலைகள் தூங்குகையில் வாய் மடித்துத் தூங்கும் இயல்பு
உணர்த்த 'மடித்த வாயின துயின்றன' என்றார்.  இடங்கர் என்பது முதலை
வகைகளில் ஒன்று.  'கொடுந்தாள் முதலையும் இடங்கரும் கராமும்' (குறிஞ்சிப்
- 257) என்ற இடத்து நச்சினார்க்கினியர் இவை மூன்றும் சாதிவிசேடம் என்றது
காண்க.  வயின்தொறும் வயின்தொறும் - அடுக்குத்தொடர் பன்மை
உணர்த்திற்று.                                                  118