சுக்கிரீவன் வாராமையால் இராமன் சினந்து, இலக்குவனை அனுப்புதல் 4269. | அன்ன காலம் அகலும் அளவினில், முன்னை வீரன், இளவலை, 'மொய்ம்பினோய்! சொன்ன எல்லையின் ஊங்கினும் தூங்கிய மன்னன் வந்திலன்; என் செய்தவாறுஅரோ? |
அன்ன காலம் - அத்தன்மையுடைய கூதிர்ப்பருவம்; அகலும் அளவினில் - நீங்கும் அளவில்; முன்னை வீரன் - மூத்தவனும் வீரனுமான இராமன்; இளவலை - தன் தம்பியான இலக்குவனை நோக்கி; மொய்ம்பினோய் - வலிமைமிக்கவனே! சொன்ன எல்லையின் ஊங்கினும் - (முன்பு நான்) குறித்த நான்கு மாதத் தவணை கழிந்த பின்பும்; மன்னன் தூங்கினன் வந்திலன் - அச் சுக்கிரீவ அரசன் தாமதப்படுத்துவதை மேற்கொண்டு இங்கு வந்து சேரவில்லை; செய்த ஆறு என் - அவன் செய்த செயல் தான் என்ன? கார்த்திகை மாதத்தில் வருவதாகச் சொன்ன சுக்கிரீவன் வராததால், இராமன் இலக்குவனைநோக்கிச் சுக்கிரீவன் இவ்வாறு வராமல் காலம் தாழ்த்துகிறானே என்றான் என்பது. தூங்குதல் - செயலைத் தாழ்த்துதல், தாமதப்படுத்துதல், 'தூங்குக தூங்கிச் செயற்பால' என்பதில் (குறள் 672) இப்பொருள் அமைதல் காண்க. முன்னை - முன் பிறந்தவன்; முதன்மையான வீரர்களுள் தலைமையுடையவன். மொய்ம்பு - தோள், வலிமை. 1 |