4270.'பெறல் அருந் திருப் பெற்று, உதவிப் பெருந்
திறம் நினைந்திலன்; சீர்மையின் தீர்ந்தனன்;
அறம் மறந்தனன்; அன்பு கிடக்க, நம்
மறன் அறிந்திலன்; வாழ்வின் மயங்கினான்.

     பெறல் அருந் திருப் பெற்று - (அந்தச் சுக்கிரீவன்) பெறுதற்கு
அருமையான அரச செல்வத்தை (நம்மால்) அடைந்து; உதவிப் பெருந்திறன்
-
(அவனுக்கு) நாம் செய்த உதவியின் பெயருமையை; நினைந்திலன் -
கருதிப் பார்க்கவில்லை; சீர்மையின் தீர்ந்தனன் - (அவன் தனக்குரிய)
ஒழுகலாற்றில் தவறிவிட்டான்; அறம் மறந்தனன் - (உதவி செய்தவரை
மறவாத) நன்றியாகிய அறத்தை மறந்துவிட்டான்; அன்பு கிடக்க - அவனுக்கு
நாம் செய்த அன்புச் செயலை மறந்தது இருக்கட்டும்; நம் மறம் அறிந்திலன்
-
அவன் நம்முடைய வீரச் செயல்களையும் நினைவிற் கொண்டானில்லை;
வாழ்வின் மயங்கினான் -
(ஆட்சியில் தன்னை மறந்து இன்பம் அனுபவித்து)
வளமான வாழ்க்கையில் அழுந்திக் கிடக்கின்றான்.

     பெறல் அருந் திருப் பெற்று' - யாவராலும் பெறுதற்கியலாத அரச
பதவியாகிய செல்வத்தைக் குறிக்கும். நிரம்பினான் ஒருவன் காத்த நிறை அரசு
(4143) என்று இராமனே இவ்வரசைக் குறிப்பிடுகிறான்.  'உதவிப் பெருந்திறன்'
- 'செய் யாமற் செய்த உதவிக்கு வையகமும், வானகமும் ஆற்றல் அரிது'
(குறள். 101) 'காலத்தினாற் செய்த நன்றி சிறிதெனினும்,  ஞாலத்தின் மாணப்
பெரிது' - (குறள். 102) 'சீர்மையின் தீர்ந்தனன்': எந்நன்றி கொன்றார்க்கும்
உய்வுண்டாம் உய்வில்லை, செய்ந்நன்றி கொன்ற மகற்கு' - (குறள். 110) மறம் -
மறன்: ஈற்றுப் போலி.                                             2