4271. | 'நன்றி கொன்று, அரு நட்பினை நார் அறுத்து, ஒன்றும் மெய்ம்மை சிதைத்து, உரை பொய்த்துளார்க் கொன்று நீக்குதல் குற்றத்தில் தங்குமோ? சென்று, மற்று அவன் சிந்தையைத் தேர்குவாய். |
நன்றிகொன்று - (இப்படி) ஒருவன் தனக்குச் செய்த நன்றியைச் சிதைந்து; அருநட்பினை நார் அறுத்து - பெறுவதற்கு அருமையான நட்பாம் அன்புக்கயிறுஅற அழித்து; ஒன்றும் மெய்ம்மை - (எல்லோர்க் கும்) ஏற்றதாகப் பொருந்தி நிற்கும் வாய்மையை; சிதைத்து - குலைத் துவிட்டு; உரைபொய்த்துளான் - வாக்குத் தவறியவனை; கொன்று நீக்குதல் - கொன்று ஒழிப்பது; குற்றத்தின் நீங்கும் ஆல் - பழிபாவங் களிலிருந்து நீங்கிய செயலேயாகும் (ஆகவே); சென்று அவன் சிந்தையை - நீ அங்கே சென்று அச்சுக்கிரீவனது மன நிலையை; தேர்குவாய் - ஆராய்ந்து அறிந்து வருவாய்; 'நட்பு நாரற்றன' - (நாலடி. 12) 'நலத்தின்கண் நாரின்மை' - (குறள் 958) நார் - கயிறு அன்புப் பிணைப்பை உணர்த்திற்று. ஒருவன் செய்த நன்றியை மறந்தவனைக் கொன்றாலும் பழிபாவமில்லை; ஆதலால், அச்சுக்கிரீவனது உண்மையான மனத்தை அறிந்து வருமாறு இலக்குவனிடம் இராமன் கூறினான் என்பது. 3 |