4276. | 'நீதி ஆதி நிகழ்த்தினை, நின்று, அது, வேதியாத பொழுது, வெகுண்டு, அவண் சாதியாது, அவர் சொல் தரத் தக்கனை; போதி ஆதி' என்றான் - புகழ்ப் பூணினான். |
நின்று நீதி ஆதி - (கோபக்குறி காட்டாமல்) சாந்தமாக இருந்து நீ சொல்வது அரச நீதி முதலான அறங்கள் என்று தோன்றுமாறு; நிகழ்த்தினை - எடுத்துச்சொல்லி; அது வேதியாதபொழுது - அந் நீதி யுரையானது (அவர்களின் மன மாறுபாட்டை) மாற்றாத பொழுது; வெகுண்டு அவண் சாதியாது - நீ கோபித்து அந்த இடத்தில் (அப்போதே அவர்களை) அழிக்காமல்; அவர்சொல் - அவர்கள் கூறும் சொற்களை; தரத் தக்கனை - (என்னிடம்) வந்து சொல்லக் கடமைப் பட்டுள்ளாய்; போதி ஆதி என்றான் - (நீ) செல்க என்று சொல்லி விடை தந்தான்; புகழ்ப் பூணினான் - புகழையே தனக்கு அணிகலனாகக் கொண்ட இராமன். 'புகழ்ப் பூணினான் - புகழைப் பூண்' என்று கூறியமையின் இராமனைப் பொறுத்தமட்டில் இவ்வுலகோர் கூறும் புகழ்ச்சிகள் இன்றியும் தனக்குத்தானே உவமையாக விளங்குபவன் என்பதாம். பிறருக்குப் புகழாகிய பூண் அவர்கள் சிறப்பை மிகுதிப்படுத்தும். இராமனைப் பொறுத்தமட்டில் அவனை அடைந்ததால் அப்பூண் (புகழ்) தான் சிறப்பெய்தியது. இயல்பாகவே, சினம்பொங்கும் தன்மையுள்ள இலக்குவன் மாறுபட்ட செயல் செய்யாதவாறு இராமன் இவ்வாறு கட்டளையிட்டான் என்பது. 8 |