4283. | தன் துணைத் தமையன் தனி வாளியின் சென்று, சேண் உயர் கிட்கிந்தை சேர்ந்தவன், குன்றின்நின்று ஒரு குன்றினில் குப்புறும் பொன் துளங்கு உளைச் சீயமும் போன்றனன். |
தன் துணைத் தமையன் - தனக்கு உற்ற துணைவனும் தமையனுமான இராமனது; தனி வாளியின் சென்று - ஒப்பற்ற அம்பு போல விரைந்து சென்று; சேண் உயர் கிட்கிந்தை - மிக உயர்ந்த கிட்கிந்தை மலையை; சேர்ந்தவன் - அடைந்தவனான இலக்குவன்; குன்றினின்று - ஒரு மலையிலிருந்து; ஒரு குன்றினில் குப்புறும் - மற்றொரு மலையில் தாவிப் பாய்கின்ற; பொன்துளங்கு - பொன்னிறத்தோடு விளங்கும்; உளைச் சீயமும் - பிடரி மயிரினையுடைய ஆண் சிங்கத்தையும்; போன்றனன் - ஒத்து விளங்கினான். வலிமையிலும், பெருமித நடையிலும் தோற்றத்திலும் சிங்கம் இலக்குவனுக்கு உவமையாகும். தட்டுத்தடங்கல் இல்லாமல் குறித்த இடத்திற்கு விரைந்து சென்று சேர்வதால் இலக்குவனுக்கு இராமபாணம் உவமையாயிற்று. குப்புறுதல் - குதித்தல். சேண் உயர் - ஒரு பொருட்பன்மொழி. 15 |