அங்கதன் சுக்கிரீவனிடத்திற்கு போதல் 4285. | அன்ன தோன்றலும், ஆண் தொழிலான் வரவு இன்னது என்று அறிவான், மருங்கு எய்தினான்; மன்னன் மைந்தன் மனக் கருத்து உட் கொளா, பொன்னின் வார் கழல் தாதை இல் போயினான். |
அன்ன தோன்றலும் - அந்த அங்கதனும்; ஆண்தொழிலான் - வீரமிக்க செயல் செய்யக்கூடிய இலக்குவன்; வரவு இன்னதென்று அறிவான் - வந்த நோக்கம் இன்னதென்று அறியும் பொருட்டு; மருங்கு எய்தினான் - அவ்இலக்குவன் அறியாமல் ஒரு புறமாகப் பக்கத்தில் சென்று; மன்னன் மைந்தன் - தசரத மன்னனின் மகனான இலக்குவனது; மனக்கருத்து உட்கொளா - மனத்தின் கருத்தை (அவனது முகக்குறிப்பால்) அறிந்து; பொன்னின் வார்கழல் தாதை - (பொன்னாலான நெடிய வீரக்கழலையுடைய தன் சிறிய தந்தையாகிய சுக்கிரீவனது; இல் போயினான் - அரண்மனைக்குச் சென்றான். தாதையில் - ஒரு சொல்லாகக் கொண்டு சிறிய தந்தையிடம் என்றும் பொருள் உரைக்கலாம். இலக்குவனது கோபத்தை அவனது முகக் குறிப்புக் கொண்டே அங்கதன் அறிந்தான் என்பது மருங்கு சென்று என்ற தொடர் இலக்குவன் அங்கதனிடம் பேசினான் என்ற வான்மீகத்தை அடியொற்றிப் பிறந்ததாகும். ஆனால், கம்பன் இவர்களிடையே பேச்சு நடைபெற்றதாகக் கூறவில்லை. அதனால் அங்கதன் மறைவாக இலக்குவன் முகக்குறிப்பைக் காணும் அளவிற்கு அவன் பக்கத்தே சென்றான் என்று பொருள் கூறப்பட்டது. 'நெஞ்சம் கடுத்தது காட்டும் முகம்' என்பது திருக்குறள் (குறள் 706) அறிவான் - வானீற்று வினையெச்சம். 17 |