சுக்கிரீவனது நிலை

4286. நளன் இயற்றிய நாயகக் கோயிலுள்,
தள மலர்த் தகைப் பள்ளியில், தாழ் குரல்
இள முலைச்சியர் ஏந்து அடி தைவர,
விளை துயிற்கு விருந்து விரும்புவான்.

     நளன் இயற்றிய - வானர வீரனாகிய நளனால் உருவாக்கப் பட்ட;
நாயகக் கோயிலுள் -
சிறந்த அரண்மனைக்குள்ளே; தளமலர்
தகைப்பள்ளியில் -
இதழ் நிறைந்த மலர்களைப்பரப்பி அமைக்கப்பட்ட
அழகிய படுக்கையில்; தாழ்குழல் இள முலைச்சியர் - நீண்ட கூந்தலை யும்
இளமையான முலைகளையும் உடைய மகளிர்; ஏந்து அடி தைவர - சிறந்த
(தன்) கால்களை வருடிப்பிடிக்க; விளை துயிற்கு - உண்டாகும் தூக்கத்திற்கு;
விருந்து விரும்புவான் -
(தான்) விருந்தாவதை விரும்புவனும்.

     புதிதாக ஆட்சியைப் பெற்று அந்தப்புரத்திலே மகளிர் பலர் தன் அடி
களை வருட இனிய தூக்கத்தை மேற்கொண்டுள்ளான் சுக்கிரீவன் என்பது.
நளன் - தேவ சிற்பியான விசுவகர்மாவின் மகன்.  ஏந்து அடி - மடியில்
வைத்துக் கொண்டுள்ள பாதங்கள் என்றும் உரைக்கலாம்.  தூங்குவதற்குத்
தைவரல் முதலியன துணையாய் இன்பம் பயப்பன. ஆதலால், அவற்றைத்
துயிலுக்கு விருந்தென்றார்.  இதுமுதல் ஐந்து பாடல்கள் குளகச் செய்யுள்கள்.
விரும்புவான்,

விளங்குவான், வைகுவான், மயங்கினான், தயங்குவான் (4286 - 4290) என்ற
சொற்கள் கிடந்தனன் (4291) என்ற வினைமுற்றைக் கொண்டு முடியும்.   18