4287. | தெள்ளியோர் உதவ, பெருஞ் செல்வம் ஆம் கள்ளினால் அதிகம் களித்தான்; கதிர்ப் புள்ளி மா நெடும் பொன் வரை புக்கது ஓர் வெள்ளி மால் வரை என்ன விளங்குவான்.* |
தெள்ளியோர் உதவ - தெளிந்த அறிவுடையவரான இராமலக்கு வரால் வழங்கப்பெற்ற; பெருஞ்செல்வமாம் - பெரிய அரசாட்சிச் செல்வமாகிய; கள்ளினால் அதிகம் களித்தான் - கள்ளைக் குடித்ததனால் மிகுதியாகக் களிப்பில் மிதந்தவனாய்; கதிர்ப்புள்ளி - ஒளிக்கற்றைகளின் சேர்க்கையையுடைய; மாநெடும் பொன் வரை - மிகப்பெரிய பொன்னிற மாலையில்; புக்கது - புகுந்து தங்கக் கூடிய; ஓர் வெள்ளி மால் வரை என்ன - ஒரு பொய வெள்ளி மலை போல; விளங்குவான் - விளங்குபவனும். களிப்பை உண்டாக்குதல் பற்றிப் பெருஞ்செல்வதைக் 'கள்' என்றார். சுக்கிரீவன், ஆட்சிச் செல்வத்தைத் தானாகப் பெறவில்லை. இராமலக்குவரின் உதவியால் பெற்றான். இதனைத் 'தெள்ளியோர் உதவ' என்றதனால் விளக்கினார். 'செல்வமாம் கள்' - செல்வத்தால் ஆகும் மயக்கம். வெண்ணிறமுள்ள சுக்கிரீவனுக்கு வெள்ளி மலையையும், பொன்னிறக் கட்டிலுக்கு (அரண்மனை)ப்பொன்மலையையும் உவமையாக்கினார். 'பொன் வரை புக்கதோர் வெள்ளி மால் வரையென்ன விளங்குவான்' - இல்பொருள் உவமை. 19 |