4289. தித்தியாநின்ற செங் கிடை வாய்ச்சியர்
முத்த வாள் நகை முள் எயிற்று ஊறு தேன்,
பித்தும், மாலும், பிறவும், பெருக்கலால்,
மத்த  வாரணம் என்ன மயங்கினான்;

     தித்தியாநின்ற - தித்திக்கின்ற; செங்கிடை வாய்ச்சியர் - செங்கிடை
போலச் சிவந்த இதழ்களையுடைய பெண்களின்; முத்த வாள் நகை -
முத்துப்போல வெண்ணிறமான புன்னகை செய்கின்ற; முள் எயிற்று -
கூர்மையான பற்களிலிருந்து; ஊறுதேன் - சுரக்கின்ற தேன்; பித்தும்
மாலும்-
பித்தினையும் மயக்கத்தையும்; பிறவும் - காமம், மதம், மறதி,
சோர்வு, துயில்முதலிய தாமசக் குணச் செயல்களையும்; பெருக்கலான் -
மிகுதிப்படுத்துவதனால்; மத்த வாரணம் என்ன - மதங்கொண்ட
யானைபோல; மயங்கினான் - அறிவு அழிந்தவனும்.

     சுக்கிரீவன், மகளிரின் இதழ் அமுதத்தை என்றைக்கும் சுவை
தருவதெனக் கருதி மயங்கிக் கிடந்தான் என்பது.  செங்கிடை என்பது சிவந்த
நிறம் உடைய ஒருவகை நெட்டி.  தேன் - உவமையாகுபெயர். - தித்தியா
நின்ற தேன் என இயைக்கவும்.                                    21