4290.மகுட குண்டலம் ஏய் முகமண்டலத்து
உகு நெடுஞ் சுடர்க் கற்றை உலாவலால்,
பகலவன் சுடர் பாய் பனி மால் வரை
தக மலர்ந்து, பொலிந்து தயங்குவான்.

     மகுட குண்டலம் ஏய் - மகுடமும் குண்டலங்களும் பொருந்திய; முக
முண்டலத்து -
முகமண்டலத்திலிருந்து; உகும் நெடுஞ்சுடர்க் கற்றை - வீசும்
மிகுதியான ஒளியின் தொகுதி; உலாவலால் - (வெண்மை யான உடம்பு
முழுவதும்) பரவுவதால்; பகலவன் சுடர்பாய் - சூரியனது கதிர்கள் பரவிய;
மால்பனி வரை தக -
மிக்க பனி படர்ந்த இமய மலையைப்போல; மலர்ந்து
பொலிந்து -
மலர்ச்சியுற்றுப் பொலிவோடு; தயங்குவான் - விளங்குபவனுமாய்.

     சூரியனது கதிர்கள் பரவுகின்ற இமயமலையைப் போன்று சுக்கிரீவன்
விளங்கினான் என்பது உவமையணி.                               22