அங்கதன் அனுமனிடம் செல்லுதல் 4294. | ஆதலால், அவ் அரசு இளங் கோள் அரி, - யாதும் முன் நின்று இயற்றுவது இன்மையால், கோது இல் சிந்தை அனுமனைக் கூவுவான் போதல் மேயினன் - போதகமே அனான். |
ஆதலால் - அரசாட்சிச் செருக்காலும், கள்ளின் மயக்கத்தாலும் தன்னை மறந்து சுக்கிரீவன் படுக்கையை விட்டு எழாமல் கிடக்கவே; போதகமே அனான் - யானைக் கன்று போன்றவனும்; அவ் அரசு இளங்கோளரி - இளமையான வலிய ஆண் சிங்கம் போன்றவனுமான அவ் அங்கதன்; முன் நின்று இயற்றுவது - சுக்கிரீவன் முன்னே நின்று செய்யத்தக்கது; யாதும் இன்மையால் - எதுவும் இல்லாததால்; கோது இல் சிந்தை அனுமனை - குற்றமற்ற மனத்தையுடைய அனுமனை; கூவுவான் போதல் மேயினான் - அழைப்பதற்காக (அவனிடம்) செல்ல லானான். வலிமை, துணிவு, முன்னும் பின்னும் நோக்குதல் இவற்றால் சிங்கமும், நடை, வலிமை, பெருமிதம் ஆகியவற்றால் யானையும் அங்கதனுக்கு உவமையாயின. 26 |