4306. | பரிய மா மதிலும், படல் வாயிலும் சரிய வீழ்ந்த; தடித்தின் முடித் தலை நெரிய, நெஞ்சு பிளகக, நெடுந் திசை இரியலுற்றன; இற்றில இன் உயிர், |
(இவ்வாறு)பரிய மா மதிலும் - பருத்து உயர்ந்த அம் மதிலும்; படல் வாயிலும் - அகன்று நின்ற நகர வாயிலும்; சரிய வீழ்ந்த - சாய்ந்து விழுந்ததால் உண்டாகிய; தடித்தின் முடித்தலை நெரிய - இடியால் (தங்கள்) தலையிடம் நொறுங்கவே; நெஞ்சு பிளப்ப - (அம் மதிலைச் சார்ந்து நின்ற வானரங்கள்) நெஞ்சு உறுதியழிந்து கலங்கி; நெடுந்திசை - திசைகள் தோறும்; இரியல் உற்றன - நெடுந்தூரம் ஒடின; இன்னுயிர் இற்றில - (அதனால்) இனிய உயிர் அழியாதனவாயின. (தப்பிப் பிழைத்தன) மதில்: ஏணி கொண்டும் ஏறமுடியாத உயர்வும், புறத்தே உள்ளவர்க்குத் தோண்டமுடியாதவாறு அடி அகலமும், உள்ளே இருந்து தொழில் செய்வோர்க்குத் தலையகலமும் கொண்டிருக்கவேண்டும். இவ்வியல்புகளை உணர்த்தவே 'பரிய மா மதில்' என்றார். முடித்தலை: மதில்களின் சிகரம். உயர்வு அகலம் திண்மை அருமைஇந் நான்கின் அமைவரண் என்றுரைக்கும் நூல் - (குறள் 743). 38 |