4307. பகரவேயும் அரிது; பரிந்து எழும்
புகர் இல் வானரம் அஞ்சிய பூசலால்,
சிகர மால் வரை சென்று திரிந்துழி
மகர வேலையை ஒத்தது, மா நகர்,

     பகரவேயும் அரிது - (குரங்குகளின் அச்சத்தால் நிகழ்ந்தவற்றைச்)
சொல்வதற்கும் அரியது; பரிந்து எழு - கொடிய துன்பப்பட்டு இருப்பிடத்தை
விட்டு ஓடிய; புகர் இல் வானரம் - குற்றமற்ற அக் குரங்குகள்; அஞ்சிய
பூசலால் -
அச்சத்தால் செய்த பேரொலியால்; மா நகர் - சிறந்த அக்
கிட்கிந்தை நகரமானது; சிகர மால்வரை சென்று - சிகரங்களையுடைய பெரிய
(மத்தாகிய) மந்தர மலை புகுந்து; திரிந்துழி மகர வேலையை ஒத்தது -
சுழன்ற பொழுது ஆரவாரித்த மீன்களைக் கொண்ட பாற்கடலைப் போன்றது.

     பூசல் -ஆரவாரம்.                                         39