என்ன செய்யலாம் எனத்  தாரையை வினவுதல்

4309. அன்ன காலையில், ஆண் தகை ஆளியும்,
பொன்னின் நல் நகர் வீதியில் புக்கனன்;
சொன்ன தாரையைச் சுற்றினர், நின்றவர்,
'என்ன செய்குவது? எய்தினன்!' என்றனர்.

     அன்ன காலையில் - அச் சமயத்தில்; ஆண் தகை ஆளியும் -
ஆடவருள் சிங்கம் போன்றவனாகிய இலக்குவன்; பொன்னின் நன்னகர் -
அழகும் சிறப்பும் மிக்க அந் நகரத்து; வீதியில் புக்கனன் - வீதியில்
புகலானான்; சொன்ன தாரையை -  (அதைக் கண்டு அஞ்சி) முன்னர்க்
கடிந்து பேசிய தாரையை; சுற்றினர் நின்றவர் - சுற்றி நின்றவர்களான
அங்கதன் முதலியோர்; எய்தினன் - (அத்தாரையை நோக்கி) (இலக்குவன்)
வந்துவிட்டானே; என்ன செய்குவது - நாம் என்ன செய்வது; என்றனர் -
என்று கேட்டார்கள்.

     ஆண்தகை ஆழியான் எனப்பாடம் கொண்டு பின்வருமாறு நயம்
காண்பாரும் உளர். தான் இருந்த இடத்திலேயிருந்து தனது நிலம் முழுவதும்
தன் கட்டளையால் நடக்கச் செய்யும் ஆற்றல் மிக்க அரசனைப் போல
வல்லமை நிறைந்த இராமன் இலக்குவன் மூலமாகத் தன் கட்டளையை
நிறைவேற்றுகின்றான்.  ஆதலால் இராமனை 'ஆண்டகை' என்றும்,
'இலக்குவனை' அவனது ஆழியான் என்றும் கூறதல் பொருந்தும் என்பர்.  41