அனுமன் உரைத்த வழி

4310.அனையன் உள்ளமும் -
      ஆய்வளையாய்! - அலர்
மனையின் வாயில்
      வழியினை மாற்றினால்,
நினையும்; வீரன் அந்
      நீள் நெறி நோக்கலன்;
வினையம் ஈது என்று
      அனுமன் விளம்பினான்.

     ஆய்வளையாய் - ஆராய்ந்தெடுத்து அணிந்த வளையல்களை
உடையவளே; அலர் மனையின் வாயில் - (நீ சென்று) திறத்துள்ள
அரண்மனையின் வாயில்; வழியை மாற்றினால் - வழியை (உள்ளே
இலக்குவன் செல்ல முடியாதபடி)த் தடுத்துவிட்டால்; அனையன் உள்ளமும் -
அந்த இலக்குவனது மனமும்; நினையும் - (தான் செய்ய முனைந்திருப்பது
சரிதானா என்று) எண்ணும்; வீரன் அந் நீள்நெறி நோக்கலன் - இலக்குவன்
அந்த நெடு வழியைக் கண்ணால் பார்க்கவும் மாட்டான்; வினையம் ஈது -
(வந்த காரியத்தைச் சொல்வான். அதனால் செய்யத்தக்க) தந்திரம் இதுவே;
என்று அனுமன் விளம்பினன் - என்று அனுமன் (தாரையை நோக்கிக்)
கூறினான்.

     உள்ளமும்: எச்சவும்மை

     'இலக்குவனது மனம் மலர் போல் மென்மையானது; பெண்ணாகிய நீ
சென்று சுக்கிரீவனது அரண்மனை வாயில் வழியில் நின்றுவிட்டால்
பெண்ணைக் கொல்லக் கூடாதென்ற அறத்தையறிந்த அவன் விலகிச் சென்று
விடுவான்.  இதுவே நாம் செய்யத் தக்க தந்திரம்' என்று அனுமன் சொன்னான்
என்பது.

     இப்பாடல் மிகை என்று ஐயரவர்கள் நூலகப் பதிப்பு தெரிவிக்கிறது.  சில
சுவடிகளில் மட்டும் இப்பாடல் காணப்படுகிறது.  'அரசியற்றுறையில் வாலிக்கும்
அறிவுரை கூறக்கூடிய ஆற்றல் சான்றவள் அவள் (தாரை) என்பது....  ....
இப்பாடலை நீக்கியதால் கதைத்தொடர்பு கெடாமையும் உய்த்துணர்க' என்று
அப்பதிப்பில் காணப்படும் விளக்கம் கருதத்தக்கதாகஉள்ளது.          42