தாரை வழியினைத் தடுத்து நிற்றல்

4311.'நீர் எலாம், அயல் நீங்குமின்;நேர்ந்து, யான்,
வீரன் உள்ளம் வினவுவல்' என்றலும்,
பேர நின்றனர், யாவரும்;பேர்கலாத்
தாரை சென்றனள், தாழ் குழலாரொடும்.

     நீர் எலாம் - (அங்கதன் முதலானவர்களைப் பார்த்த) நீங்கள்
எல்லோரும்; அயல் நீங்குமின் - அப்பாலே செல்லுங்கள்; யான் நேர்ந்து-
நான் (இலக்குவன் எதிரே) சென்று; வீரன் உள்ளம் - வீரனான அவனது
மனக் கருத்தை; வினவுதல் என்றாலும் - வினவி அறிவேன் என்று சொன்ன
அளவில்; யாவரும் பேர நின்றனர் - அந்த வானரர்கள் யாவரும் விலகிச்
சென்று நின்றார்கள் (உடனே); பேர் கலாத்தாரை - நெறிமுறைகளில்
பின்னிடாத தாரை; தாழ் குழலாரொடும் - மலர் சூடிய கூந்தலையுடைய
தோழியரோடு; சென்றனள் - புறப்பட்டுச் சென்றாள்.

     பெண்களை எதிர்க்க மாட்டான் என்பதை 'வீரன்' என்ற சொல்
உணர்த்துகின்றது.  பேர, பேர்கலா - முரண் தொடை.                  43