4320. மங்கல அணியை நீக்கி, மணி
      அணி துறந்து, வாசக்
கொங்கு அலர் கோதை மாற்றி,
      குங்குமம் சாந்தம் கொட்டாப்
பொங்கு வெம் முலைகள், பூகக்
      கழுத்தோடு மறையப் போர்த்த
நங்கையைக் கண்ட வள்ளல்,
      நயனங்கள் பனிப்ப நைந்தான். *

     மங்கல அணியை நீக்கி - தாலியை அணியாமல் விடுத்து; மணி அணி
துறந்து -
இரத்தின மணிகள் போன்ற மற்றைய அணிகலன் களையும்
நீக்கிவிட்டு; வாசக் கொங்கு அலர் - மணமிக்க தேன் பெருகுகின்ற
மலர்களின்; கோதை மாற்றி - மாலை சூடுவதையும் விட்டு; குங்குமம்
சாந்தம் கொட்டா -
குங்குமப் பூவின் குழம்பையும், சந்தனக் கலவையையும்
பூசாத; பொங்கு வெம் முலைகள் - பருத்துள்ள வெம்மையான முலைகள்;
பூகக்  கழுத்தோடு மறையப்போர்த்து -
பாக்குமரம் போன்ற கழுத்துடன்
மறையும்படி (மேலாடையால்) நன்றாகப் போர்த்துள்ள; நங்கையைக் கண்ட
வள்ளல் -
அத் தாரையைப் பார்த்த அருள்வள்ளலான இலக்குவன்;
நயனங்கள் பனிப்ப -
(தாரை யின் தோற்றம் கண்டதாலும், தன் தாயரை
நினைந்ததாலும்) தன் கண்களில் நீர் துளிக்க; நைந்தான் - வருந்தினான்.

     தாரையின் கைம்மைக் கோலம் இங்கு விளக்கப் பெறுகின்றது.
இலக்குவன் கண்ணீர் மல்கி நைந்துருகுவதற்குக் காரணம் தன்னுடைய தாயரும்
இப்படித்தானே கைம்மைக் கோலம் பூண்டிருப்பர் என்ற நினைவினால்.
மங்கலவணி. 'தாலி'; 'ஈகையரிய இழையணி மகளிர்' - புறம்.127           52