4322. | ' ''சேனையும் யானும் தேடித் தேவியைத் தருவென்'' என்று, மானவற்கு உரைத்த மாற்றம் மறந்தனன், அருக்கன் மைந்தன்; ''ஆனவன் அமைதி வல்லை அறி'' என, அருளின் வந்தேன்; மேல் நிலை அனையான் செய்கை விளைந்தவா விளம்புக!' என்றான். |
சேனையும் யானும் - என் சேனையும் நானும்; தேவியைத் தேடித் தருவென் - சீதையைத் தேடிக் கொண்டு சேர்ப்பேன்; என்று மான வற்கு - என்று மனுகுல மன்னனான இராமனுக்கு; அருக்கன் மைந்தன் - சூரியன் மகனான சுக்கிரீவன்; உரைத்த மாற்றம் மறந்தனன் - தான் சொன்ன வார்த்தையை மறந்துவிட்டான்; ஆனவன் அமைதி - அத்தகையை சுக்கிரீவனின் நிலைமையை; வல்லை அறி என - விரைவில் சென்று நீ அறிந்து வருவாயாக என்று (இராமன் என்னிடம்) சொல்ல; அருளின் வந்தேன் - அந்தக் கட்டளைப்படி நான் இங்கே வந்தேன்; மேல்நிலை அனையான் - மேன்மையான அரசாட்சியைப் பெற்ற அச் சுக்கிரீவனது; செய்கை விளைந்தவா - செயல்முறை நிகழ்ந்த விதத்தை; விளம்புக என்றான் - சொல்லுக என்று (தாரையைப் பார்த்து) இலக்குவன் கூறினான். சுக்கிரீவன் இராமனிடம் சொன்னபடி வராததால் அவனது செயலை அரிய வந்தேன்; அவனது செயல்தான் என்ன என்று இலக்குவன் தாரையை வினவினான் என்பது. விளைந்தவாறு என்பது ஈறுகெட்டு நின்றது. 54 |