4327.'ஆண்டு போர் வாலி ஆற்றல்
      மாற்றியது அம்பு ஒன்று ஆயின்,
வேண்டுமோ, துணையும் நும்பால்?
      வில்லினும் மிக்கது உண்டோ?
தேண்டுவார்த் தேடுகின்றீர், தேவியை;
      அதனைச் செவ்வே
பூண்டு நின்று உய்தற்பாலார்,
      நும் கழல் புகுந்துளோரும்.'

     ஆண்டு போர் வாலி - அப்பொழுது போரில் வல்ல வாலியின்;
ஆற்றல் மாற்றியது -
வலிமையை வதைத்தது (வாலியைக் கொன்றது) அம்பு
ஒன்று -
(நீங்கள் ஏவிய) பாணம் ஒன்றே; ஆயின் துணைவர் வேண்டுமோ
-
என்றால், (பகைவரையழிக்க) உங்களுக்கு வேறு துணை வேண்டுமோ?
நும்பால் வில்லினும் - உங்களிடமுள்ள வில்லைக் காட்டிலும்; மிக்கது
உண்டோ -
சிறந்த ஒரு துணையும் உள்ளதோ?தேவியைத் தேண்டுவார் -
சீதை இருக்கும் இடத்தைத் தேடிக் காண்பாரை மட்டும்; தேடுகின்றீர் -
நாடுகின்றீர் (அவ்வளவுதான்); நும் கழல் - உங்கள் திருவடிகளை;
புகுந்துளோரும் -
சரணடைந்துள்ளவரான சுக்கிரீவன்
முதலானோரும்; அதனைச் செவ்வே பூண்டு நின்று - அப் பணியை
நல்ல முறையில் ஏற்றுக் கொண்டு செம்மையாகச் செய்து; உய்தற் பாலார் -
ஈடேறக் கடமைப்பட்டவராவார்.

     உங்களுக்குச் சீதையுள்ள இடத்தைத் தேடியறியத் துணை
வேண்டுமெயல்லாமல் பகை வெல்லத் துணை தேவையில்லை.  ஆகவே, அப்
பணியைச் செய்து முடிக்கக் கடமைப்பட்டவர் சுக்கிரீவன் முதலியோரே
என்றாள் தாரை.  தேண்டுவார் - தேடுதல் விரித்தல்விகாரம்.           59