4332. | 'தேவரும், தவமும், செய்யும் நல் அறத் திறமும், மற்றும் யாவையும், நீரே என்பது, என்வயின் கிடந்தது; எந்தாய்! ஆவது நிற்க, சேரும் அரண் உண்டோ? அருள் உண்டு அன்றே மூவகை உலகும் காக்கும் மொய்ம்பினீர்! - முனிவு உண்டானால்?' |
எந்தாய் - எம் தலைவனே!தவமும் - (முற்பிறப்பிலும் இப் பிறப்பிலும் நாங்கள் செய்த) தவமும்; செய்யும் நல்லறத் திறமும் - (நாங்கள்) செய்த சிறந்த தருமச் செயல்களும்; தேவரும் மற்றும் யாவை யும் - தேவர்களுள் மற்றுள்ள பொருள்களும்; நீரே என்பது - (எங் களுக்கு) நீங்களே என்னும் கருத்து; என்வயின் கிடந்தது - என்னிடம் பதிந்துள்ளது; ஆவது நிற்க - அது அப்படியே இருக்கட்டும்; மூவகை உலகும் - மூன்று வகையான உலகங்களையும்; காக்கும் மொய்ம்பினீர் - பாதுகாக்கும் ஆற்றல் உடையவரே!; முனிவு உண்டானால் - (உங்களுக்கு) எங்கள் மேல் சீற்றம் உண்டாகுமானால்; சேரும் அரண் - (நாங்கள் தப்பிச்சென்று) சேர்ந்து வாழும் பாதுகாவல்; உண்டோ - உள்ளதோ (இல்லை); அருள் உண்டு அன்றே - (அதற்கும்) உங்களது கருணையே கதியாக உள்ளதன்றோ? உங்களோடு மாறுபட்டவர்க்கும் உங்கள் கருணையேயல்லாமல் கதி வேறில்லை என்றான் அனுமன். மொய்ம்பு: வலிமை, தோள் 64 |