4337. அனையது கருதி, பின்னர்,
      அரிக் குலத்தவனை நோக்கி,
'நினை; ஒரு மாற்றம் இன்னே
     நிகழ்த்துவது உளது, நின்பால்;
இனையன உணர்தற்க ஏற்ற;
      எண்ணிய நீதி' என்னா,
வனை கழல் வயிரத் திண் தோள்
      மன் இளங் குமரன் சொல்வான்:

     அனையது கருதி - (இவ்வாறு) அதைப் பற்றிச் சிந்தித்து; பின்னர் -
பின்பு; வனை கழல் வயிரத் திண்தோள்- வீரக் கழல் பூண்ட கால்களையும்,
மிக்க வலிமையான தோள்களையும் உடைய; மன் இளங்கும ரன் -
இளவரசனான இலக்குவன்; அரிக்குலத்தவனை நோக்கி - வானர குலத்தைச்
சேர்ந்த அனுமனைப் பார்த்து;  இன்னே நின்பால் - இப்பொழுதே
உன்னிடம்; ஒரு மாற்றம் நிகழ்த்துவது உளது - (நான்) ஒன்று கூற
வேண்டியுள்ளது; இனையன - கூறும் இந்த வார்த்தைகள்; உணர்தற்கு
ஏற்ற-
(நீ) உணர்ந்து அறிவதற்குத் தகுதியுடையவை; எண் ணிய நீதி -
(இவ்வார்த்தைகள்) எண்ணித் துணிந்த நீதியின்பாற் பட் டவையாகும்;
என்னாசொல்வான் - என்று சொல்லத் தொடங்கினான்.

     அனையது - சுக்கிரீவன் இராமனது ஆணையை மீறாதிருந்தம்,
அவனுக்குக் கிடைத்த செல்வம் சிறுமை செய்தது என்பது.  செல்வம்
பெற்றவர்க்குப் பல்வேறு மாறாட்டங்கள் நிகழக் கூடும்; அதனால் பல தீங்குகள்
விளைய வாய்ப்புள்ளது.  கழல் - தானியாகுபெயர்.                    69